அரிசி, சீனி மாத்திரம் கொள்வனவு செய்ய முடியாது: மக்களுக்கு பேரிடியான தகவல்
சதொச நிறுவனத்தில் நிபந்தனை அடிப்படையில் அரிசி மற்றும் சீனி விற்பனை செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தினம் முதல் சதொச நிறுவனத்தில் அரிசி மற்றும் சீனி என்பனவற்றை மட்டும் கொள்வனவு செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி அல்லது சீனி கொள்வனவு செய்ய வேண்டுமாயின் குறைந்தபட்சம் வேறு ஐந்து பொருட்களை கொள்வனவு செய்ய வேண்டுமென்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.
வர்த்தக விவகார அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) இதனை தெரிவித்துள்ளார்.
வறிய குடும்பம் என்றாலும் அரிசி மற்றும் சீனி மட்டும் கொள்வனவு செய்ய மாட்டார்கள் என அவர் குறிப்பிட்டுளார்.
மஞ்சள், சீனி மற்றும் அரிசி போன்ற பொருட்களை குறைந்த விலையில் சதொச நிறுவனத்தில் கொள்வனவு செய்து வெளியில் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதனால் இவ்வாறு நிபந்தனை அடிப்படையில் பொருள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
சந்தையில் கேள்வி நிலவும் வரையில் அரிசி தொடர்ச்சியாக இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரிசி விலை கட்டுப்பாடு தோல்வியடைந்த காரணத்தினால் இறக்குமதி செய்யப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒரு கிலோகிராம் நாடு அரிசி 99 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படும் எனவும், ஒருவருக்கு ஐந்து கிலோகிராம் வழங்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பர்மா ஆகிய நாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளை மற்றும் சிவப்பு சீனியும் இவ்வாறு வரையறைகளுடன் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் என அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
என்ற போதும் நாட்டில் தற்போது பொருட்களின் விலையேற்றத்தால் கடும் திண்டாட்டத்தில் உள்ள மக்களுக்கு இந்த அறிவிப்பானது பேரிடியாக இருக்கும் என சமூக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.