உடனடியாக வைத்திய ஆலோசனையை பெறவும்! பொதுமக்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்
நாட்டின் சில பகுதிகளில் காற்றின் தரத்தில் சரிவு காணப்படுவதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபையின் ஊடகப்பேச்சாளர் அஜித் குணவர்தன தெரிவித்துள்ளார்.
அதன்படி, நேற்று (18) முதல், நாட்டில் வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு மற்றும் தெற்கு மாகாணங்களிலும், இரத்தினபுரி மற்றும் கேகாலை மாவட்டங்களிலும் காற்று தரத்தின் சரிவு 150 முதல் 200 வரை உள்ளது.
இது ஓரளவு சாதகமற்ற சூழ்நிலை என்றும், அடுத்த 02 நாட்களுக்குள் இந்த நிலைமை குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவு்ம் அவர் மேலும் கூறியுள்ளார்.
காற்று சுழற்சி
சர்வதேச எல்லைகளுக்கு இடையிலான காற்று சுழற்சி காரணமாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அஜித் குணவர்தன மேலும் கூறியுள்ளார்.

மேலும் காற்றின் தர சரிவு உணர்திறன் உள்ளவர்களுக்கு சாதகமற்ற சூழ்நிலையாக இருக்கலாம் என்றும், அவர்களுக்கு சுவாசிப்பதில் சிரமம் அல்லது ஏதேனும் ஒவ்வாமை ஏற்பட்டால், அவர்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையைப் பெற வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
மனித செயல்பாடுகளும் காற்றின் தரம் குறைவதற்கு பங்களிக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தீ, வாகனங்களிலிருந்து வரும் புகை போன்றவை இதற்குக் காரணமாகின்றன, மேலும் பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் போன்ற பொருட்களை எரிப்பதைத் தவிர்க்குமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.