கண்டியிலும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வுக்கு தடை!
தமிழீழ விடுதலைப் புலி ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்படும் குழுவினால் இன்று நிகழ்வு ஒன்று நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கிடைத்த தகவலையடுத்து அதற்கு எதிராக கண்டி பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கண்டி முல்கம்பொலவில் உள்ள விருந்தகம் ஒன்றில் இந்த நிகழ்வு நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும் இந்த நிகழ்வை நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருந்தகத்தின் நிர்வாகத்திற்கு எதிராக இந்த தடை உத்தரவு பெறப்பட்டுள்ளது..
“கைதிகளை மனிதாபிமானத்துடன் நடத்துங்கள்” என்ற தொனிப்பொருளின் கீழ் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த நிகழ்வின்போது, ஸ்ரீ தலதா மாளிகை மற்றும் ஸ்ரீ மஹா போதி ஆகியவற்றின்மீது தாக்குதல் நடத்திய நிலையில் சிறையில் உள்ள விடுதலைப் புலிகளின் குடும்பங்கள் உட்பட்ட விடுதலைப் புலிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கும் உதவிகள் வழங்கப்படவிருந்தன.
இலங்கையின் மனித உரிமை செயற்பாட்டாளரும் காணாமல் போன ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொடவும் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை 2006 ஆம் ஆண்டு படுகொலை செய்ய முயற்சித்ததற்காக ஜனாதிபதியின் மன்னிப்பைப் பெற்ற முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர் சேனன் என்ற சிவராஜா ஜெனிவன் உட்பட்ட பல தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் இந்த நிகழ்வுக்கு அழைக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலக "மனித உரிமைகள் தினத்தை முன்னிட்டு இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டிருந்தாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
கண்டி வத்தேகம மாத்தளை வீதியிலுள்ள தேவாலயம் ஒன்றில் கடமையாற்றும் கிறிஸ்தவ மதகுரு ஒருவரினால் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இவர், கண்டி, திகன, நத்தரம்பொத்தயில் மனித உரிமைகள் அலுவலகம் ஒன்றை நடத்தி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.