ரூபாவும் இல்லை டொலரும் இல்லை
ஜனாதிபதி உட்பட அரசாங்கம் உடனடியாக பதவி விலக வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
நாட்டில் தற்போது காணப்படும் அரசியல் சூழ்நிலையில், வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களுக்கு இலங்கை தொடர்பாக எவ்வித நம்பிகையும் ஏற்படவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல கூறியுள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
எதிர்க்கட்சியிடம் தீர்வை கோரும் அரசாங்கம்
சர்வதேசம் அங்கீகரிக்கக் கூடிய அரசாங்கம் ஒன்று இலங்கையில் ஆட்சியில் இருப்பது அவசியம். தற்போது அரசாங்கம் பதவி விலக வேண்டும். எந்த அரசாங்கம் எதிர்க்கட்சியிடம் இருந்து தீர்வை வழங்குமாறு கோரும்?. அரசாங்கம் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சியிடம் தீர்வை கோருகிறது.
நாங்கள் ஆட்சியில் இருந்தால், என்ன தீர்வை முன்வைப்போம் என்று கேட்கின்றனர். ஜனநாயகத்தில் அப்படி எதுவுமில்லை. ஒரு தேர்தல் அறிக்கையை வெளியிட்டு, அதனை நிறைவேற்ற முடியவில்லை என்றால், பதவி விலக வேண்டும்.
ஜனாதிபதியும் அரசாங்கமும் ராஜினாமா செய்ய வேண்டும். எதிர்க்கட்சியிடம் தீர்வை கேட்க அவர்களுக்கு உரிமையில்லை. உலகில் எந்த நாடு எதிர்க்கட்சியிடம் இருந்து தீர்வை கோரும். இவர்கள் தமது அவசியத்திற்காக ஜனநாயகத்தை திரிபுப்படுத்தியுள்ளனர்.
பணத்தை அனுப்ப அஞ்சும் இலங்கையர்கள்
இரண்டு வாரங்களுக்கு தேவையான பணமே இருப்பதாக மத்திய வங்கியின் ஆளுநர் கூறினார். அன்றாடம் பிழைப்பு நடத்தும் நிலைமை ஏற்பட்டுள்ளது. ரூபாவும் இல்லை. அமெரிக்க டொலர்களும் இல்லை.
இந்தியாவிடம் இருந்து 500 மில்லியனை பெற்று ஒரு மாத தேவையை பூர்த்தி செய்கின்றனர். அது தீர்ந்த பின்னர், மீண்டும் 500 மில்லியன் டொலர்களை பெற்றுக்கொள்கின்றனர். எத்தனை நாட்களுக்கு இப்படி செய்ய முடியும்.
வெளிநாடுகளில் இருப்பவர்கள் நாட்டுக்கு பணத்தை அனுப்ப பயப்படுகின்றனர். பணம் கிடைக்காமல் போகும் என அவர்கள் எண்ணுகின்றனர், இதுதான் பிரதனமான பிரச்சினை.
வெளிநாடுகளில் இருக்கும் இலங்கையர்களுக்கே இலங்கை மீது நம்பிக்கையில்லை என்றால், சர்வதேச சமூகம் குறித்து சொல்லத் தேவையில்லை. சர்வதேசம் அங்கீகரிக்கும், நாட்டு மக்களின் விருப்பத்திற்கு அமைவான அரசாங்கம் அவசியம் எனவும் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.