இஷாரா செவ்வந்தியின் முகத்தோற்றத்தினால் மீண்டும் சிக்கல்! குழப்பத்தில் பொலிஸார்
பாதாள உலகக்குழு உறுப்பினர் கணேமுல்ல சஞ்சீவ சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய சந்தேகநபர்களில் ஒருவரான இஷாரா செவ்வந்தியை அரசு பகுப்பாய்வாளரிடம் அனுப்பி முக பரிசோதனை நடத்த கொழும்பு குற்றப்பிரிவு அனுமதி கோரியுள்ளது.
நேற்று (7) கொழும்பு தலைமை நீதவான் அசங்க எஸ். போதரகம முன் முன்னிலையான போதே இவ்வாறு அனுமதி கோரப்பட்டுள்ளது.
செவ்வந்தியின் தோற்றத்தை ஒத்த தக்ஷி
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியின் தோற்றத்தை ஒத்ததாக கூறப்படும் நந்தகுமார் தக்ஷி மற்றும் அவர் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல உதவியதாக கூறப்படும் சந்தேகநபர் அஜித் குமார ஆகியோரை முன்னிலைப்படுத்திய போது கொழும்பு குற்றப்பிரிவு இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளது.

சந்தேகநபரான இஷாரா செவ்வந்தி கொழும்பு குற்றப்பிரிவில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும், அவரை "நேருக்கு நேர் விசாரணைக்காக இன்று (08) அரசு பகுப்பாய்வாளர் அலுவலகத்தின் டிஜிட்டல் பிரிவுக்கு அனுப்ப உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரியுள்ளது.
இதன்போது உண்மைகளை பரிசீலித்த தலைமை நீதிபதி, சந்தேக நபரான செவ்வந்தி இன்னும் பொலிஸ் நிலையத்தில் விசாரிக்கப்படுவதால், தற்போது உரிய உத்தரவை பிறப்பிக்க முடியாது என்றும், சந்தேக நபரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர் தொடர்புடைய கோரிக்கைகளை முன்வைக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
விளக்கமறியல் உத்தரவு
நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபர்களான தக்ஷி மற்றும் அஜித் ஆகியோரின் சார்பில் முன்னிலையான வழக்கறிஞர்கள், சந்தேகநபர்களுக்கு உதவிய குற்றச்சாட்டை நிரூபிக்க போதுமான ஆதாரங்களை பொலிஸார் சமர்ப்பிக்கவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதன்போது விசாரணைகள் குறித்த முன்னேற்ற அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளதுடன், சந்தேக நபர்களை 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
பரபரப்பான கதைக்களத்திற்கு நடுவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் ஏற்பட்ட மாற்றம்... முழு விவரம் Cineulagam