தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதியொருவரை கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு கோரிக்கை
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட கைதி ஒருவர் மாத்தறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் அவரை கொழும்பு மகசின் சிறைச்சாலைக்கு மாற்றுமாறு அவர் கோரிக்கை முன்வைத்துள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் (Gajendrakumar Ponnambalam) தெரிவித்துள்ளார்.
மாத்தறை சிறைச்சாலைக்கு சென்று பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள த.நிமலன் என்ற கைதியை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோர் இன்று பார்வையிட்டு இருந்தனர்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள வவுனியாவைச் சேர்ந்த தங்கவேல் நிமலன் என்பவரை மாத்தறை சிறைச்சாலையில் பார்வையிட்டு பேசியிருந்தோம்.
அவர் சார்ந்த வழக்கில் 3 சந்தேக நபர்கள் இருக்கும் நிலையில் அவரை மட்டும் தனிமைப்படுத்தி மாத்தறை சிறைச்சாலையில் தடுப்பில் வைத்துள்ளார்கள்.ஏனைய இருவரும் கொழும்பு மகசின் சிறைச்சாலையில் இருக்கின்றார்கள்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் என்ற அடிப்படையில் அவர் மட்டுமே மாத்தறை சிறைச்சாலையில் உள்ளார்.ஒரே ஒரு தமிழ் கைதியாகவும் இச் சிறைச்சாலையில் அவரே உள்ளார்.அவருக்கு மொழி சார்ந்த வசதிகளும் குறைவாக உள்ள நிலையில் அவர் எம்மிடம் அவசர கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஏனையவர்களை தடுத்து வைத்துள்ள சிறைச்சாலைகளில் தன்னையும் சேர்த்துக் கொள்ளுமாறு அவர் கோரியுள்ளார்.அது சம்மந்தமாக நாங்கள் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் பேசுவோம்.
அத்துடன், கைதிகளை விடுவிப்பதற்குரிய அழுத்தங்களை நாம் தொடர்ந்தும் கொடுப்போம்.அதேசமயம் அது நிறைவேறும் வரை இந்த கைதிகளை அவர்களது சொந்த மாவட்டத்தில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுமாறு கோரிக்கையையும் முன்வைத்துள்ளோம்.
தொடர்சியாக இந்த வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் கூட உரிய அமைச்சுக்கு கீழ் வரக்கூடிய விடயங்களை வலியுறுத்துவோம் என்பதையும் அவருக்கு தெரிவித்துள்ளோம் எனத் தெரிவித்துள்ளார்.