நிர்மாண ஒப்பந்த நிதியை வழங்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை
இலங்கை அரசாங்கத்தால் நிர்மாண ஒப்பந்தகாரர்களுக்கு வழங்கவேண்டிய 70 பில்லியன் ரூபா பணத்தொகையை அரசாங்கம் வழங்க வேண்டும் என மட்டக்களப்பு தேசிய நிர்மாண சங்கத்தின் தலைவர் ஆர். புஜந்தரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கிழக்கு ஊடக மன்றத்தில் நேற்று (15.10.2022) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
வீதி நிர்மாணம்
மேலும் கூறுகையில், நாடளாவிய ரீதியில் வீதி அதிகார சபையின் ஒப்பந்தங்களின் கீழ் வீதிகளை நிர்மாணித்து முடித்தமைக்கு அரசாங்கத்தால் ஒப்பந்தகாரர்களுக்கு 70 பில்லியன் ரூபா பணம் கொடுக்கப்பட வேண்டியுள்ளது.
அந்தவகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையால் முடிக்கப்பட்ட வேலைகளுக்கு 2 ஆயிரம் மில்லியன் ரூபாவும், கடந்த அரசாங்க்தால் கொண்டுவரப்பட்ட என்.ரி.எஸ் திட்டமான 'அருகிலுள்ள பாடசாலை' என்ற திட்டத்தில் வழங்கப்பட்ட ஒப்பந்தகாரர்களுக்கு 50 மில்லியன் ரூபாவும் வழங்கப்படவுள்ளது.
அத்துடன் விளையாட்டுத்துறை அமைச்சினால் 65 மில்லியன் ரூபாவும் மற்றும் வேறு நிறுவனங்களின் ஒப்பந்தங்கள் மூலம் 185 மில்லியன் ரூபா உள்ளிட்ட 2 ஆயிரத்து 300 மில்லியன் ரூபாக்களை மாவட்டத்தில் நிறைவு செய்த வேலைகளுக்கு அரசாங்கம் வழங்க வேண்டியுள்ளது.
தொழிலாளர்கள் பாதிப்பு
குறித்த பணத்தை அரசாங்கம் வழங்காததால் ஒப்பந்தகாரர்களின் கீழ் வேலை செய்துவந்த தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே முதலில் அரசாங்கம் இந்த ஒப்பந்தங்களை செய்து கொண்டிருக்கின்ற ஒப்பந்தகாரர்களின் நிலுவை பணத்தை விடுவிக்கவேண்டும்.
அவ்வாறு முடியாதெனில்
வங்கி மற்றும் பினான்ஸ் கம்பனிகள் மூலம் ஒப்பந்தகாரர்களுக்கு ஏற்படுகின்ற அழுத்தத்தை அரசாங்கம்
குறைக்கவேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.