உடன் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுங்கள்! - சுகாதார அமைச்சிடம் கோரிக்கை
கோவிட் - 19 தொற்றின் மூன்றாவது அலை ஏற்படாமல் கட்டுப்படுத்த சுமார் ஒரு மாத காலம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியராச்சிக்கு வைத்தியர்கள் அழைப்பு விடுத்துள்ளதாக கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அடுத்த மாதம் வெசாக் பண்டிகை வரவுள்ள நிலையில், வெசாக் மண்டல தன்சல் மற்றும் ஆலயங்களை பார்வையிடுவதற்கான கட்டுப்பாடுகளை விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழ் - சிங்கள புத்தாண்டுக்கு பின்னர் இலங்கையில் கோவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சடுதியான உயர்வு ஏற்பட்டுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு வைத்தியர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை, இன்று மாத்திரம் 657 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், இலங்கையில் கோவிட் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 98,722 ஆக உயர்ந்துள்ளது.
இதன்படி, தற்போது மருத்துவ கவனிப்பில் உள்ள நோயாளிகளின் எண்ணிக்கை 4,206 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
