மான்குளத்தினை மாங்குளமாக மாற்றக் கோரும் தமிழார்வலர்கள்
மாங்குளம் என்ற தமிழ் பண்பாட்டுப் பழைமை மிக்க கிராமத்தின் பெயரினை மான்குளமாக சுட்டுவது பொறுப்பற்ற செயற்பாடாக இருக்கும் என ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒட்டுசுட்டானில் ஒரு இடத்தின் பெயரினை இரு இடங்களில் இரு வேறாக எழுதி காட்சிப்படுத்தப்பட்டுளளது.
"மாங்குளம் " என்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தமிழ் கிராமமொன்றின் பெயரினையே இரு வேறாக எழுதியிருப்பதனை அவதானிக்க முடிகின்றது.
"மாங்குளம்" என அமைய வேண்டிய அந்தக் கிராமத்தின் பெயரினை "மான்குளம்" என குறிப்பிட்டிருப்பதனை அவதானிக்கலாம்.
இது தொடர்பில் தமிழறிஞர்களும் ஈழ ஆர்வலர்களும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொண்டனர்.
ஒட்டுசுட்டான் சந்தி
முல்லைத்தீவு ஒட்டுசுட்டானில் இரண்டு பிரதான சந்திகள் அதிகமான மக்கள் போக்குவரத்தினை கொண்டதாக இருக்கின்றது.
முல்லைத்தீவில் இருந்து மாங்குளம் நோக்கிய பாதையில் முதலாவது பிரதான ஒட்டுசுட்டான் சந்தி உள்ளது.இது புதுக்குடியிருப்பு நோக்கிய பாதையினை இந்த பாதையுடன் இணைப்பதால் தோன்றுகின்றது.
இந்திரன்கடைச் சந்தி, ஆமிக்காப் சந்தி என மக்களால் விழிக்கப்படும் இந்த சந்தியினை கற்சிலைமடு வீதிச் சந்தி எனவும் சிலர் குறிப்பிட்டு பேசியிருந்ததனையும் அவதானிக்க முடிகின்றது.
மாங்குளம் முல்லைத்தீவு வீதியில் இருந்து புதுக்குடியிருப்பு செல்லும் பாதைவழியே கற்சிலைமடு,மன்னகண்டல், கெருடமடு,பேராறு,புத்தடி ஆகிய கிராமங்களினூடாக செல்கின்றது என முதலாவது சந்தி பற்றிய தேடலில் அவ்வூர் வாசியொருவர் குறிப்பிட்டிருந்தார்.
இரண்டாவது சந்தியாக முல்லைத்தீவு மாங்குளம் வீதியில் நெடுங்கேணிக்கான பாதை சந்திப்பதால் தோன்றுகின்றது. இது சிவன்கோவில் சந்தி எனவும் மக்களால் விழிக்கப்படுவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
சிவநகர்,காதலியார்சம்மளங்குளம்,இறம்பைக்குளம், நெடுங்கேணி என இந்த ஒட்டுசுட்டான் நெடுங்கேணி வீதி செல்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
1990 ஆம் ஆண்டில் நடைபெற்ற இரண்டாவது மாவீரர் நாளின் போது விமானக் குண்டுவீச்சுக்குள்ளான இடமாக ஒட்டுசுட்டானின் பழைய சந்தி இருப்பதாகவும் அவர் தன் நினைவுகளையும் பகிர்ந்திருந்த மையும் குறிப்பிடத்தக்கது.
1989.11.27 அன்று முதலாவது மாவீரர் நிகழ்வு நடைபெற்றிருந்தது.1990.11.27 இரண்டாவது மாவீரர் நாளின் போது பழைய ஒட்டுசுட்டான் சந்தியில் மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகள் நடைபெற்று நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளை அந்த அசம்பாவிதம் நடந்தாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
மான்குளம் எங்குள்ளது
மாங்குளம் என்ற பெயரினை மான்குளம் என குறிப்பிட்டு ஒட்டுசுட்டினில் உள்ள முதலாவது பிரதான சந்தியான இந்திரன்கடைச் சந்தியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரதான வீதிகளில் உள்ள சந்திகளில் இருந்து ஆரம்பமாகும் வீதிகள் எங்கு செல்கின்றன என்பதை குறிப்பதற்காக இடங்காட்டிகள் நிறுவப்பட்டிருக்கும்.
அவ்வாறு நிறுவப்பட்டுள்ள இடங்காட்டியில் மாங்குளத்தினை சுட்டி அதற்குள்ள பயணத் தூரத்தினையும் காட்டியிருப்பதனை அவதானிக்கலாம்.
மான்குளம் 24 கிலோமீற்றர் தொலைவிலும் புதுக்குடியிருப்பு 20.7 கிலோமீற்றர் தொலைவிலும் இருப்பதாக இடங்காட்டி சுட்டிக்காட்டுவதனை குறிப்பிடலாம்.இந்த மான்குளமே மாங்குளமாக அமைய வேண்டும் என்பது ஆர்வலர்களின் வாதமாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டாவது பிரதான ஒட்டுசுட்டான் சந்தியான சிவன்கோவில் சந்தியில் உள்ள இடங்காட்டியில் மாங்குளம் மற்றும் நெடுங்கேணி ஆகிய இரு இடங்களை சுட்டி அவற்றுக்குள்ளான தூரங்களையும் இடங்காட்டியில் காட்டப்பட்டுள்ளது.
நெடுங்கேணி 11 கிலோமீற்றர் எனவும் மாங்குளம் 23.5 கிலோமீற்றர் எனவும் குறிப்பிட்டிருப்பதனை அவதானிக்கலாம்.
ஒட்டுசுட்டான் நகரில் உள்ள இரு இடங்காட்டிகளில் 0.5 கிலோமீற்றர் இடைவெளிகளில் உள்ள அவற்றில் ஒரே இடத்தின் பெயரினை இருவேறு முறைகளில் குறிப்பிட்டிருப்பது பொருத்தப்பாடனதாக இருக்காது என கிராமத்தின் கல்வியலாளர்களிடம் கருத்துக்கேட்ட போது ஒருமித்த கருத்துக்களை வெளிப்படுத்தியிருந்தனர்.
இடங்களுக்கான பெயர்களில் எழுத்துப்பிழை வருவது இயல்பானதே என்ற சமாளித்துப்போகும் இயல்பினையும் அவர்கள் வெளிப்படுத்துவதை குறிப்பிடலாம்.
இதுவரை இந்த இடங்காட்டிகளில் உள்ள பெயர்களில் உள்ள மாற்றங்கள் பற்றிய நுண் அவதானத்தினை ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குள மக்கள் கொண்டிருக்கவில்லை என்பதனையும் அவதானிக்க முடிகின்றது.
அக்கறையின்மையின் விளைவு
இத்தகைய போக்கின் தன்மை பற்றி கருத்திட்ட சமூகவிடய ஆய்வாளர் இப்படியான சின்னச் சின்ன விடயங்களில் காட்டும் அக்கறையின்மைகளினாலேயே இலங்கையின் தமிழர்களின் இடங்கள் பறிபோய்க் கொண்டிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
ஒரு இடத்தின் பெயரினை மாற்றிப் பயன்படுத்த தலைப்பட்டால் நாளடைவில் அந்த இடத்திற்கான பாரம்பரியமான பழைமையான பெயர் மங்கிப் போய்விடும்.விராவாக அது தன் தனித்துவத்தினை இழந்து விடும்.
நாயீனாதீவினைக் குறிப்பிடுவதில் ஏற்பட்டிருந்த பெயர்க் குழப்பம் தொடர்பில் ஏற்பட்டிருந்த குழப்பநிலையினை அவர் இதன் போது நினைவுபடுத்தியமையும் நோக்கத்தக்கது.
இடங்காட்டிகளை நிறுவியவர்கள்
வீதியபிவிருத்தியின் போது வீதிகளில் நிறுவப்படும் இடங்காட்டிகள் மற்றும் வீதிக்குறியீடுகள் அனைத்தும் வீதியபிவிருத்தித் திணைக்களத்னராலேயே யேற்கொள்ளப்படும் என்பது நோக்கத்தக்கது.
இடங்காட்டிகள் மற்றும் வீதிக்குறியீடுகள் கொழும்பில் தான் அச்சிடப்பட்டு தயாரிக்கப்பட்டு அனுப்பிவைக்கப்படுவதாக அத்திணைகள அதிகாரி ஒருவருடனான விடயத்தெளிவுபடுத்தலுக்கான உரையாடலின் போது அவர் குறிப்பிட்டிருந்தார்.
சிலவேளைகளில் தவறுகள் ஏற்படுவதாகவும் சுட்டிக் காட்டப்படும் போது அல்லது தங்களால் இனம் காணப்படும் போது அவை தொடர்பில் கவனமெடுத்து தேவையான மாற்றங்களைச் செய்து கொடுப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
நெடுங்கேணியில் உள்ள ஒட்டுசுட்டானுக்கான தூரங்காட்டியில் இரு வேறு தூரங்கள் இருந்ததை சுட்டிக்காட்டிய போது அது தொடர்பில் கவனமெடுத்திருந்த வீதியபிவிருத்தி பொறியியலாளர் உடனடியாக கவனமெடுத்து திருத்தங்களை செய்து தந்ததாக தன் அனுபவத்தினை ஆசிரியர் ஒருவர் பகிர்ந்துகொண்டமையும் குறிப்பிடத்தக்கது." மாங்குளம் என்பதுவே பழைமையான பெயர் ஆகும்.மான்குளம் மாங்குளமாக மாற்றப்பட வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
வேறு எங்கும் இல்லை
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளத்தினைச் சுட்டும் அத்தனை இடங்களிலும் மாங்குளம் என்ற பெயரே பயன்படுத்தப்பட்டிருப்பதனை குறிப்பிட வேண்டும்.
நீதிமன்ற கட்டடத்தொகுதி , மாங்குளம் மகாவித்தியாலயம், மாங்குளத்தில் உள்ள கடைகள், நிறுவனங்கள் என எல்லா இடங்களிலும் மாங்குளம் என்ற பயன்பாடே இருக்கின்றது.
மாங்குள மக்களின் ஆவணங்களிலும் மாங்குளம் தான் பயன்பாட்டில் இருக்கின்றது.
தங்களுடைய பல்கலைக்கழக விண்ணப்பத்தில் ஒரு எழுத்து மாறினால் கூட தவறு என சுட்டிக் காட்டப்படும் நிர்வாக அணுகலில் இடத்தின் பெயரில் மட்டும் அக்கறையின்மை இருப்பது ஆச்சரியமளிக்கின்றது என யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒருவர் கருத்துக்களையும் பகிர்ந்திருந்தமையும் சுட்டிக் காட்டத்தக்கது.
மாற்றம் வேண்டும்
நம்மைச் சூழ நடக்கும் சின்னச் சின்னத் தவறுகளை உடனுக்குடன் சரி செய்வது இலகுவான காரியமாகும்.அவற்றை செய்யாது விட்டு விட்டால் தோன்றும் பெரும் தவறுகள் அல்லது சிக்கல்கள் தீர்க்கமுடியாத பெரும் பிரச்சினைகளாக நீண்டு தொடரலாம் என சமூகவிடய ஆய்வாளர் சுட்டிக் காட்டுகின்றார்.
ஒட்டுசுட்டான் மற்றும் மாங்குள மக்கள் மான் குளத்தினை மாங்குளமாக மாற்ற தேவையான முயற்சிகளை எடுத்து சரியான பெயரினை இடங்காட்டியில் காட்சிப்படுத்த முயற்சிக்க வேண்டும் என ஈழ தமிழார்வலர்கள் பலரின் கருத்தாகவும் இருப்பதும் இங்கே நோக்கத்தக்கது.
தமிழர் தம் விழுமியங்களை மாற்றிக் கொள்ளாது பேணிப் பாதுகாத்து தொடர வேண்டும்.அதுவே அடுத்த சந்ததியின் இருப்புக்கு உதவும் முதன்மைக் காரணிகளில் ஒன்றாக இருக்கும் என்பது திண்ணம்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |