உண்மையை கண்டறியும் ஆணைக்குழு முயற்சியை கைவிடுமாறு அரசாங்கத்துக்கு கோரிக்கை
இலங்கையில் இனப்பிரச்சினை மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொறிமுறையாக,உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவை அமைக்கும் முயற்சியை உடனடியாக கைவிடுமாறு மனித உரிமை அறிஞர்கள் இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உண்மை, ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கத்திற்கான ஆணைக்குழுவை ஸ்தாபிப்பதற்கான இலங்கை அரசாங்கத்தின் தற்போதைய முயற்சிகள் குறித்து, உலகெங்கிலும் உள்ள நிலைமாறுகால நீதி மற்றும் மனித உரிமைகள் அறிஞர்கள் தமது அக்கறையை அறிக்கை ஒன்றின் மூலம் வெளிப்படுத்தியுள்ளனர்.
அத்துடன் இந்த அறிக்கையில் தமது கையெழுத்துக்களையும் பதிவிட்டுள்ளனர்.
இலங்கையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கில் பாதிக்கப்பட்ட குழுக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள் உத்தேச பொறிமுறைக்கு தங்கள் ஆட்சேபனையை வெளிப்படுத்தியுள்ளன
இலங்கையில் சுயாதீனமான ஆணைக்குழுக்கள் மீதான நம்பிக்கையின்மையால் இந்த ஆட்சேபனைகள் முன்வைக்கப்படுவதாக அந்தக்குழுக்கள்; தெரிவித்துள்ளன.
இலங்கையில் முன்னர் அமைக்கப்பட்ட பல ஆணைக்குழுக்கள் தோல்வியுற்றன மற்றும் நீதி வழங்குவதில் மோசமான பதிவைக் கொண்டிருந்தன.
அத்துடன் சர்வதேசத்தின் கீழ் அதன் கடமைகளை நிறைவேற்ற விரும்பாத தற்போதைய அரசியல் தலைமையின் சாதனைப் பதிவுகளை அந்த ஆணைக்குழுக்கள் வெளிப்படுத்தியிருந்தன.
இதில், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் தீர்மானத்தின் (30-1) கீழ் இலங்கையின் உறுதிப்பாட்டின் ஒரு பகுதியாக நிறுவப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் மற்றும் இழப்பீடு அலுவலகம் ஆகியவற்றின் தோல்விகளும் அடங்கும் என்று உலக மனித உரிமை அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் ஒப்பந்த அமைப்புகள், ஐக்கிய நாடுகளின் சிறப்பு நடைமுறைகள், பிராந்திய நீதிமன்றங்கள் மற்றும் சர்வதேச மற்றும் உள்நாட்டு நீதிமன்றங்கள் மூலம் கடந்தகால துஸ்பிரயோகங்கள் பற்றிய உண்மையை அறியும் தனிநபர்களின் உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
போருக்குப் பிந்தைய மற்றும் கடந்த கால சர்வாதிகார சூழல்களின் உண்மையைத் தேடும் செயல்முறையானது, கடந்த கால மீறல்களின் அளவு, வடிவங்கள், அவற்றின் காரணங்கள் மற்றும் விளைவுகள் ஆகியவற்றை நிறுவுவதற்கு பங்களிக்கும்.
கடந்த கால முறைகேடுகள்
எவ்வாறாயினும், அத்தகைய செயல்முறைகள் சூழல் சார்ந்ததாகவும், பாதிக்கப்பட்டவர்களை உள்ளடக்கியதாகவும், அதிகாரம் அளிப்பதாகவும் இருக்க வேண்டும்.
மேலும் நீதி மற்றும் பொறுப்புக்கூறலுக்கு வழிவகுக்க வேண்டும் என்று அறிஞர்கள் குறிப்பிட்டுள்ளனர்
அதனை விட முக்கியமாக, ஒரு நாடு உண்மையைக் கண்டறியும் செயல்முறைக்கு தயாராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அத்தகைய ஆணைக்குழுவை நிறுவ விரும்பும் அரசாங்கம், கடந்த கால முறைகேடுகள் குறித்து தீவிர விசாரணையைத் தொடர அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்த வேண்டும்.
முன்னதாக காணாமற்போனோர் அலுவலகத்தின் ஊடாக தமது அரசியல் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு இந்த இலங்கை அரசாங்கத்திற்கு போதிய சந்தர்ப்பம் கிடைத்தது.
எனினும் பாதிக்கப்பட்ட சமூகத்தினரிடையே நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அரசாங்கம் தவறிவிட்டது
இந்தநிலையில் நாட்டின் பரந்த சூழல் உண்மையைத் தேடும் செயல்முறைக்கு உகந்ததாக இருக்க வேண்டும்.
தற்போது உண்மையை கண்டறியும் அலுவலக யோசனை முன்மொழியப்பட்டுள்ள நிலையில், தற்போதைய அரசாங்கம் நம்பத்தகுந்த வகையில் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளாகி வருகிறது
மனித உரிமை மீறல்கள் தொடர்கின்றன. காணாமல் போனவர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட உரிமை ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களைக் கண்காணித்தல் மற்றும் ஒடுக்குதல், சிவில் மற்றும் அரசியல் உரிமைகளை ஒடுக்கும் சட்ட நடவடிக்கைகளை இயற்றுதல் என்பன தொடர்கின்றன.
அத்துடன் 2021 பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பொருளாதார மற்றும் சமூக உரிமைகளுக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் தவறியுள்ளது.
இந்தநிலையில்; பாதிக்கப்பட்டவர்களும் சாட்சிகளும், இலங்கை அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்ட செயல்பாட்டில் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் மற்றும் அதற்கு ஒத்துழைக்க தயாராக இருக்க வேண்டும்.
எனினும் அரசாங்கம், இந்த பொறிமுறைகளின் வடிவமைப்பிலிருந்து பாதிக்கப்பட்டவர்களை ஓரங்கட்டுவது அல்லது விலக்கியுள்ளது.
எனவே நிலைமாறுகால நீதியின் முக்கிய நோக்கங்களான நீதி, பொறுப்புக்கூறல் மற்றும் நிவாரணம் ஆகியவை இந்த பொறிமுறையின் ஊடாக மீண்டும் மறுக்கப்படலாம்.
அத்துடன் இந்த சூழல் பாதிக்கப்பட்டவர்களை துஸ்பிரயோகம் செய்வதுடன் அவர்களை குறைமதிப்புக்கும் உட்படுத்தி கடுமையான அநீதியை ஏற்படுத்தும் என்றும் மனித உரிமை அறிஞர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்
எனவே இந்தச் சட்டத்தைத் தொடருவதைத் தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கத்தை அவர்கள் கோரியுள்ளனர்.
இதற்கு மேலதிகமாக இலங்கையில் போர் தொடர்பான அட்டூழியங்களுக்கு உண்மை மற்றும் நீதியை உறுதி செய்வதற்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் உண்மை கண்டறியும் செயல்முறையுடன் இணைந்து செயல்படுவதற்கான வழிகளைத் தேடுமாறு, உலக அறிஞர்கள் இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.
அதேநேரம் பாதிக்கப்பட்ட-உயிர் பிழைத்தவர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இலங்கை அரசாங்கத்தின் உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவுக்கு ஆதரவளிப்பதைத் தவிர்க்குமாறு, நிலைமாறுகால நீதியில் பணியாற்றிய அனுபவம் உள்ளவர்கள் உட்பட வெளிநாட்டு அரசாங்கங்களுக்கு உலக மனித உரிமை அறிஞர்கள் வலியுறுத்தலை விடுத்துள்ளனர்.
இந்த அறிக்கையில் பின்வருவோர் கையெழுத்திட்டுள்ளனர்.