அலைகரை காணியில் குடியிருக்கும் குடும்பங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் திலீபனிடம் விடுத்துள்ள கோரிக்கை (Photos)
வவுனியா, பண்டாரிக்குளம் குளத்தின் அலைகரைப் பகுதியில் குடியிருக்கும் 32 குடும்பங்கள் குறித்த காணியினை தமக்கு வழங்குமாறு மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபனிடம் (K.Dilipan) கோரிக்கை விடுத்துள்ளனர்.
வவுனியா, பண்டாரிக்குளம் குளத்தின் அலைகரைக் பகுதிக்குரிய காணிகளில் வீடுகள் அமைத்து குடியிருக்கும் 32 குடும்பங்களுக்கு எதிராக வவுனியா மாவட்ட கமநல அபிவிருத்திக் திணைக்களத்தால் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணைகள் நீதிமன்றில் இடம்பெற்று வருகின்றது. அதில் 6 பேருக்கு எதிரான வழக்குகள் நிறைவுக்கு வந்துள்ள நிலையில், குறித்த 6 குடும்பங்களையும் குளத்தின் காணியை விட்டு வெளியேறுமாறு நீதிமன்றம் கட்டளை பிறப்பித்துள்ளதாக கமநல அபிவிருத்திக் திணைக்கள உதவி ஆணையாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து 32 குடும்பங்களும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவருமான கு.திலீபனின் கவனத்திற்கு குறித்த விடயத்தை கொண்டு சென்றதுடன், சம்மந்தப்பட்ட திணைக்களத்துடன் பேசி தமக்கு குடியிருப்பதற்கு ஒரு சிறிய நிலத்துண்டை அதில் விட்டுத்தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
மாவட்ட அபிவிருத்திக் குழு தலைவரின் இணைச் செயலாளர் கே.டினேஸ் மக்களின் மகஜரைப் பெற்றுக் கொண்டதுடன், இது தொடர்பில் அபிவிருத்திக் குழுத் தலைவருடனும் தொலைபேசியில் உரையாடியிருந்தார்.
அதன்படி விரைவில் மாவட்ட அரச அதிபர், பிரதேச செயலாளர், கமநல அபிவிருத்தி திணைக்கள அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து குறித்த காணிகளை பார்வையிட வருவதாகவும், அவர்களுடன் பேசி சாதகமான முடிவினைப் பெற்று, அதனை நீதிமன்றின் கவனத்திற்கு சம்மந்தப்பட்ட திணைக்களம் ஊடாக கொண்டு செல்வது தொடர்பில் ஆராய்வதாகவும் தெரிவித்திருந்தார்.

