எரிவாயு கொள்கலன்களைப் பெற்றுக் கொள்வோருக்கான முக்கிய அறிவித்தல்
சமையல் எரிவாயு கொள்கலனைக் கொள்வனவு செய்யும்போது, அதன் முத்திரையிடப்பட்ட பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ள கால வரையறை தொடர்பில், அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
சமையல் எரிவாயு கொள்கலன், 5 ஆண்டு காலப்பகுதிக்குள், தரப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, உறுதிப்படுத்தப்பட வேண்டும் என வலுசக்தி நிபுணர் அனில் டி சில்வா தெரிவித்துள்ளார்.
எல்பிட்டி பிரதேசத்தில், நேற்றைய தினம் புதிய முத்திரையுடனான எரிவாயு கொள்கலன் ஒன்று வெடிப்புக்குள்ளான சம்பவம் குறித்து தெிளிவுப்படுத்துகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள வலுசக்தி நிபுணர் அனில் டி சில்வா, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை வால்வு மாற்றப்படும்போது, கொள்கலனில் அந்தத் திகதி குறிப்பிடப்படும் எனத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், வால்விலும் அந்தத் திகதி பொறிக்கப்படும். சிவப்பு நிற முத்திரையிடப்பட்ட, புதிதாக எரிவாயு நிரப்பப்பட்ட கொள்கலன் பாதுகாப்பானது என அமைச்சர் கூறுகிறார்.
ஆனால், இவ்வாறு பார்க்கும்போது அந்த வால்வு பாதுகாப்பானது இல்லை தானே என வலுசக்தி நிபுணர் அனில் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.
எனவே, இது போன்ற தவறுகளைச் சரிசெய்ய வேண்டும். இனிவரும் காலங்களில் நுகர்வோர் எரிவாயு கொள்கலனைக் கொள்வனவு செய்யும்போது, அதில் குறிப்பிடப்பட்டுள்ள திகதி 5 ஆண்டுகளை விடவும் கடந்து இருக்குமாயின் அதனைக் கொள்வனவு செய்ய வேண்டாமென வலுசக்தி நிபுணர் அனில் டி சில்வா வலியுறுத்தியுள்ளார்.
எவ்வாறிருப்பினும், சமையல் எரிவாயு கொள்கலனின் வால்வுப் பகுதி உரியத் தரத்துடன் உள்ளதா? என்பதைப் பரிசோதிக்கும் இயலுமை தமது அதிகார சபையின் வசம் இல்லை என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதற்கான தர நிர்ணயத்தை உடனடியாக தயாரிக்குமாறு இலங்கை தரநிர்ணய நிறுவகத்திற்கு இன்று அறியப்படுத்த உள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சாந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், எரிவாயு செறிமானத்தை மாற்றியமை மற்றும் கவனக்குறைவாக எரிவாயு கொள்கலன்களை விநியோகித்தமை முதலான குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில், லிட்ரோ நிறுவனத்துக்கு எதிராக வழக்குத் தொடர, நுகர்வோர் விவகார அதிகார சபை தயாராகிறது.
இதற்காக சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறுவதை, அடுத்துவரும் சில நாட்களில் முன்னெடுக்கத் திட்டமிப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.