வன்னேரிக்குளம் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையம் தொடர்பில் பிரதேச மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை (Photos)
கிளிநொச்சி - வன்னேரிக்குளம் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையத்திற்கான நிரந்தர வைத்தியர் ஒருவரை நியமிக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் பிரதேச மக்கள் கருத்து தெரிவிக்கையில்,
கிளிநொச்சி மாவட்டத்தின் மிகவும் பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் வன்னேரிக்குளம் பகுதியில் இயங்கிவரும் வன்னேரிக்குளம் ஆரம்ப வைத்திய பராமரிப்பு நிலையத்திற்கு இதுவரை வைத்தியர் எவரும் நியமிக்கப்படவில்லை.
இதனால் வன்னேரிக்குளம், ஜெயபுரம், ஆனைவிழுந்தான், குஞ்சுக்குளம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் தமக்கான மருத்துவ வசதிகளைப் பெற்றுக்கொள்வதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர்.
ஆகையால் நிரந்தர வைத்தியர் ஒருவரைச் சேவையில் ஈடுபடுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம்'' இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதேவேளை குறித்த வைத்தியசாலையை அண்மித்த பகுதியில் உள்ள யோகர் சுவாமிகள் முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்பட்டு வரும் முதியோர்களுக்கான சிகிச்சைகளுக்குக் கூட அவர்களை பெரும் சிரமங்களுக்கும் மத்தியில் அக்கராயன்குளம் வைத்தியசாலை, கிளிநொச்சி வைத்தியசாலை என்பவற்றுக்குக் கொண்டு செல்லவேண்டியுள்ளதாக முதியோர் இல்ல நிர்வாகம் தெரிவித்துள்ளது.
போக்குவரத்து வசதிகளற்ற மிகவும் பின்தங்கிய பிரதேசமாகக் காணப்படும் இந்த பிரதேச
மக்களுக்கும், முதியோர் இல்லத்தில் பராமரிக்கப்படும் முதியோருக்கும்
சிகிச்சை வழங்க கூடியவகையில் வன்னேரிக்குளம் வைத்தியசாலைக்கு வைத்தியர் ஒருவரை
நியமிக்குமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.





