யாழ் மாவட்டத்தின் விளையாட்டு துறை தொடர்பில் முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ் மாவட்டத்தின் (Jaffna District) விளையாட்டு துறையில் தேசிய தரத்திலான தகுதியுடன் வீரர்களை உருவாக்குவதில் முறையான பொறிமுறை இல்லாமையால் விளையாட்டு துறை தரத்தில் முன்னேற்றம் காண முடியாதுள்ளதாக விளையாட்டுத் துறை சார்ந்தோர் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் (Douglas Devananda) சுட்டிக்காட்டியுள்ளனர்.
அமைச்சரின் யாழ்ப்பாண அலுவலகத்தில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவம் செய்யும் ஒருதொகுதி விளையாட்டுத் துறைசார் தரப்பினர் மேற்கொண்ட கலந்துரையாடலின் போதே இந்த விடயத்தை அமைச்சரிடம் முன்வைத்துள்ளனர்.
உடற்கல்வி ஆசிரியர்கள்
மேலும் தெரிவிக்கையில், “யாழ் மாவட்டத்தில் குறிப்பாக பாடசாலைகளிலிருந்தே விளையாட்டுத்துறை மாணவர்களுக்கு அடித்தளமிடப்பட்டு வருகின்றது. அதேபோன்று இங்கு பிரத்தியேகமாக விளையாட்டு துறையை பயிற்றுவிப்பதற்கான பொறிமுறை சார் கட்டமைப்பு இல்லை.
குறிப்பாக பாடசாலைகளில் மாணவர்களை விளையாட்டு துறையில் பிரகாசிக்கச் செய்ய தொடங்கினால் அந்த பயிற்சியாளர்களாக இருக்கும் உடற்கல்வி ஆசிரியர்கள் இடமாற்றத்திற்கு உள்ளாக்கப்படுகின்ற நிலை காணப்படுகின்றது.
இதனால் பாடசாலையின் விளையாட்டு பயிற்சி வேறொரு ஆசிரியரிடம் கைமாறும் போது அதில் குழப்ப நிலைகளும் தளர்வுகளும் ஏற்படும் சூழல் காணப்படுகின்றது.
இதேவேளை மாணவர்களின் சூழலுக்கேற்ப உடற்கல்வி ஆசிரியர்கள் தம்மை மாற்றியமைத்து வீரர்களின் திறமைகளை உருவாக்கி வரும் நிலையில் இவ்வாறான இடமாற்றங்கள் வரும்போது பல பாடசாலைகளில் மீண்டும் அத்துறையை ஆரம்பத்திலிருந்து தொடங்க வேண்டிய நிலை உருவாகின்றது.
பொறிமுறை இன்மை
இது பெரும்பாலும் கிராமப்புற பாடசாலைகளை பாதிக்கின்றது. இதேநேரம் கிராமப்புற பாடசாலைகளில்தான் அதிகளவான விளையாட்டு திறன் மிக்க வீரர்கள் இருக்கின்றனர்.
விளையாட்டுத்துறையில் தேசிய ரீதியில் எமது மாகாணம் 07ஆவது நிலையிலேயே இருக்கின்றது. ஆனால் அதிகளவான இளைஞர்கள் இருந்தும் இந்த நிலைக்கு காரணம் அத்துறையை வலுவானதாக பரிணமிக்கச் செய்யும் வகையிலான பொறிமுறை இன்மையே ஆகும்.
இதை மாற்றியமைத்து எமது மாணவர்கள் விளையாட்டுத்துறையில் தேசியரீதியில் சாதனையாளர்களாக உருவாக்கப்பட நவீனத்துவத்துக்கேற்ற வகையிலான விளையாட்டுத் துறைசார் அனைத்து வளங்களும் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டியது அவசியமாக உள்ளதுடன் நிர்வாக கட்டமைப்புகளிலும் புதிய உத்திகள் கொண்டு வரப்பட வேண்டும்” என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், இந்த கருத்துக்களை அவதானத்தில் கொண்ட அமைச்சர் குறித்த விடயம் தொடர்பில் விரிவாக
ஆராய்ந்து தீர்வுகளை காண முயற்சிப்பதாகவும் அத்துடன் ஒருங்கிணைப்பு குழு
கூட்டத்தில் இதனை உள்ளடக்குவதாகவும் தெரிவித்திருந்தமை
குறிப்பிடத்தக்கது.
மிக தீவிரமான நிலை! எல்லையை நோக்கிப் பாய்ந்த நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் : ஈரானின் தாக்குதல் தொடர்பில் இஸ்ரேலின் அறிவிப்பு
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |