ஆபத்தான பாலம் தொடர்பில் கிளிநொச்சி மக்கள் முன்வைத்துள்ள கோரிக்கை (Photos)
கிளிநொச்சி - திருவையாறு பகுதியில் ஆபத்தான பயணங்கள் மேற்கொள்ளப்பட்டுவரும் பாலம் அபாயகரமாக மாறியுள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
இரணைமடு நீர்ப்பாசன வாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள குறித்த பாலம் அமைக்கப்பட்டு நீண்ட ஆண்டுகள் கடந்துள்ளன. இந்நிலையில் அந்தப் பாலம் இன்று உடைந்து அபாயகரமான பாலமாகத் தோற்றம் பெற்றுள்ளது.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியில் இபாட் திட்டத்தின் கீழ் இரணைமடு குளத்தின் அபிவிருத்தி பணியின் போது அப்பகுதியில் உள்ள பாலங்கள் புதிதாக அமைக்கப்பட்டதுடன், குறித்த பாலம் புனருத்தானம் செய்யப்பட்டது.
ஆயினும் பாலங்களின் பாதுகாப்பான நிலை தொடர்பில் ஆராயப்படாது மேலெழுந்த வகையில் புனரமைப்பு செய்யப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகிக்கப்படுகின்றது.
பாலத்தின் தற்போதைய நிலைமை
பாலம் ஆரம்பத்தில் சுண்ணாம்பு கல்லினைக்கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. நீண்ட காலத்திற்கு முன்னர் குறித்த பாலம் அமைக்கப்பட்டுள்ளமையால் அது படிப்படியாகச் சேதமடைய ஆரம்பித்து இன்று போக்குவரத்து செய்வதற்கு அச்ச நிலையைத் தோற்றுவித்துள்ளது.
அப்பாலத்தின் ஊடாக ஆயிரக்கணக்கானோர் பயணம் செய்வதாகவும், கனரக வாகனங்கள் உள்ளிட்டவையும் பயணிப்பதாகவும் பிரதேச மக்கள் தெரிவிப்பதுடன், அபாயகரமான நிலையிலேயே பிரயாணங்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
திருவையாறு பிரதேசத்தையும், வின்சன் வீதியையும் இணைக்கும் குறித்த பாலமானது இரணைமடு குளத்தின் நீர்ப்பாசன வாய்க்காலைக் கடக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
இரணைமடு குளத்திலிருந்து இரண்டாவது முக்கிய பிரயாண பாலமாக அமைந்துள்ள குறித்த பாலத்தினை புனரமைத்து, அச்சமின்றி பயணிக்கும் சூழலை ஏற்படுத்தித் தருமாறு மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.



