முழு இலங்கையரையும் வேதனைக்குள்ளாக்கிய படகு விபத்து தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் 2021.11.23 திகதி இடம்பெற்ற இழுவைப்படகு விபத்து தொடர்பாக விசாரணை குழுவை நியமிக்குமாறு கிண்ணியாவிலுள்ள சிவில் அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளது.
திருகோணமலை மாவட்டத்தில் கிண்ணியா பிரதேச செயலக பிரிவில் அமைந்துள்ள குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் 2021.11.23 அன்று இடம்பெற்ற அனர்த்தத்தில் பாடசாலை செல்லும் சிறிய வயதினர் ஐவர் உட்பட ஏழு பேர் மரணம் அடைந்தது மிகவும் துரதிர்ஷ்டவசமான விடயமாகும்.
இதில் காயமுற்று பாதிப்புக்குள்ளான பலர் பல வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த துரதிஷ்ட நிலையின் போது பொதுமக்கள் அரச முப்படையினர் பொலிஸார் மற்றும் சுகாதார தரப்பினர் பாரிய சேவையினை மேற்கொண்டனர்.
இதற்காக அனைத்து தரப்பினருக்கும் எமது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
எனினும் இந்த துரதிஷ்ட நிகழ்வு தொடர்பில் முழுமையான விசாரணை ஒன்று நிகழ்த்தப்பட்டு இதற்கு பொறுப்பானவர்கள் இனங்காணப்படல் வேண்டும் எனவும் அவ்வமைப்பு விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுபோன்ற சம்பவங்கள் இலங்கை முழுவதிலும் எந்த பகுதியிலும் நடக்காத வண்ணம் முற்காப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும். மேலும் இதனுடன் தொடர்புபடும் நிறுவனங்களும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே கீழ்வரும் விடயங்களை கவனத்தில் கொண்டு விசாரணைக்குழு ஒன்று நியமிக்கப்பட வேண்டுமென அரசாங்கத்தை கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அந்த ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
1. கிண்ணியா குறிஞ்சாக்கேணி பால நிர்மாணத்தின் போது மாற்றுப்பாதை தொடர்பாக கவனத்தில் கொள்ளப்படாமை.
2. அவ்வாறாக மாற்றுப் பாதை அமைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பான கோரிக்கைகள் கவனத்தில் கொள்ளப்படாமை.
3. குறித்த சம்பவத்தில் மரணமடைந்த காயமடைந்தவர்களுக்கு உரிய அதிகூடிய நஷ்ட ஈடு வழங்க ஏற்பாடு செய்தல்.
4. மக்களை உடனடியாக காப்பாற்றிய பொதுமக்களுக்கு சன்மானம் வழங்குதல்.
5. அனர்த்தம் நடைபெற்ற இடத்தில் ஞாபகத்தூபி அமைக்கப்பட்டு பாதுகாக்கப்படல்.
6. இவ்வாறான அனர்த்த நிலையில் அனர்த்தத்திற்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் கிண்ணியா தள வைத்தியசாலையில்
a. விபத்து பிரிவு (Accident Unit)
b. தீவிர சிகிச்சை பிரிவு (ETU)
c. அதி தீவிர சிகிச்சை பிரிவு (ICU)
d. மரணித்த உடல்களை பாதுகாக்கும் குளிர்சாதனப் பெட்டிகள்(Cooler) குறைபாடு மற்றும்
e) மனிதவள குறைபாடுகளை (medical and para medical staff) என்பன மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.
7. குறித்த பாலைத்திணை மிக குறுகிய காலத்தில் கட்டி முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தல்.
8. இந்த நிர்மாணம் 3 கட்டங்களாக மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்படும் இதனை ஒரே தடவையில் கட்டி முடிப்பதற்கான ஏற்பாடுகளை செய்தல்.
9. கிண்ணியா பிரதேசத்தில் மண் அகழ்வு பாரியளவில் மிக நீண்டகாலமாக இடம்பெற்று வருகின்றது இது குறுகிய காலத்தில் பாரிய அனர்த்தம் ஒன்றை ஏற்படுத்தலாம் என பொதுமக்களும் ஆய்வாளர்களும் கடுமையான அச்சம் தெரிவித்துள்ளனர்.ஆகவே இதனை உடனடியாக தடுத்து நிறுத்துதல்.
எனவே மேற்குறித்த காரணங்களை கவனத்தில் அடுத்து விசாரணைக்குழுவை உடனடியாக
நியமித்து தருமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
இந்த மகஜர் ஜனாதிபதி,பிரதம மந்திரி விடயத்திற்கு பொறுப்பான
அமைச்சர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
