தாயிப் நகர் – கோவிலடி பிரதான வீதியை புனரமைப்புப் பணிகளை உடனடியாக நிறைவு செய்யுமாறு கோரிக்கை..!
தம்பலகாமம் பிரதேசத்திற்குட்பட்ட தாயிப் நகரிலிருந்து கோவிலடிக்குச் செல்லும் பிரதான வீதியான வெட்டாத்துப்பாலம் வீதியின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஜூன் 13ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டன.
எனினும், இன்று வரை (21.07.2026) அப்பணிகள் முழுமையாக நிறைவு செய்யப்படாமல் காணப்படுகின்றன.
கோரிக்கை
இதன் காரணமாக பொதுமக்கள் தினந்தோறும் பல்வேறு சிரமங்களையும் அசௌகரியங்களையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக முள்ளிப்பொத்தானை, மீரா நகர், சிராஜ் நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் கிண்ணியா நகருக்குச் செல்வதற்கு அதிகளவில் இந்த வீதியையே பயன்படுத்தி வருகின்றனர்.
தற்போது வீதியின் மோசமான நிலை காரணமாக போக்குவரத்து சிரமம், பயண நேர தாமதம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான அபாயங்கள் அதிகரித்துள்ளன.
எனவே, பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் பொறுப்புடைய தரப்பினரும் உடனடி நடவடிக்கை எடுத்து, வெட்டாத்துப்பாலம் வீதியின் புனரமைப்புப் பணிகளை அவசரமாக நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு ஒப்படைக்குமாறு பாதசாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


