தமிழ் பொது வேட்பாளருக்கு வாக்களியுங்கள்: ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறைகூவல்
ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சார்பில் பொது வேட்பாளராக போட்டியிடும் பா.அரியநேந்திரனுக்கு வாக்களிக்குமாறு, தமிழ்நாட்டில் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக செயற்பட்டுவரும் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு அறைகூவல் விடுத்துள்ளது.
குறித்த அறிவிப்பினை (11) புதன்கிழமை கூட்டாக விடுக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் தா.செ. மணி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கையில்,
“இலங்கையில் வருகிற செப்டெம்பர் 21ஆம் திகதி நடக்கவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழீழ மக்களின் விடுதலை, நீதிக்கான கோரிக்கைகளின் குறியீடாக பொது வேட்பாளர் ஒருவரைப் போட்டியிடச் செய்து, உலகத்திற்கு தமிழ்த்தேசிய இனத்தின் இருப்பையும் விருப்பையும் அறிவிப்பது என்ற நோக்கில் அங்குள்ள விடுதலை ஆற்றல்கள் முன்முயற்சி எடுத்துள்ளன.
ஊடக சந்திப்பு
இதன் பொருட்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் தேர்தலில் பொது வேட்பாளராகப் போட்டியிடுகிறார்.
தமிழ் மக்கள் பொது வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து வாக்களிக்க வேண்டும் என்பதை ஓர் அறைகூவலாக விடுத்து, இம்முயற்சிக்கு நமது ஆதரவையும் வெளிப்படுத்தும் நோக்கில் ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பாக சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திரிகையாளர் மன்றத்தில் செப்டெம்பர் 11ஆம் திகதி காலை 11 மணியளவில் ஊடகச் சந்திப்புக்கு ஒழுங்கு செய்துள்ளோம்” என்றுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |