வட மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் விடுத்துள்ள கோரிக்கை
வட மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் அழைப்பின் பேரில், தொழில்சார் மற்றும் நிர்வாக ரீதியான பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வட மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் கடந்த ஜூலை 1 ஆம் திகதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இது தொடர்பாக சங்கம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, வட மாகாணம் யுத்தம், கொரோனா பெருந்தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட கடினமான சூழ்நிலைகளைக் கடந்த போதிலும், அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் இடையறாத வகையில் பண்ணையாளர்களுக்குத் தொடர்ச்சியாக சேவையாற்றி வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தொழில்சார் மற்றும் நிர்வாக ரீதியான நியாயமான கோரிக்கைகள் தொடர்பில் பலமுறை எழுத்து மூலமாகவும் நேரடி கலந்துரையாடல்களிலும் தீர்வுகள் கோரப்பட்டிருந்த போதிலும், இதுவரை திருப்திகரமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
தொழிற்சங்க நடவடிக்கை
இதன் காரணமாகவே மாற்று வழியின்றி இந்த அடையாள தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருந்துகளுக்கான முறையான முகாமைத்துவ மற்றும் விநியோக முறைமையை நடைமுறைப்படுத்துதல், அனைத்து கால்நடை வைத்திய அதிகாரிகளுக்கும் வெளிப்படையான மற்றும் ஒருமைப்பாட்டான கடமைப் பட்டியலை அறிமுகப்படுத்துதல், நியாயமான இடமாற்றக் கொள்கையை அமுல்படுத்துதல், உயர் பதவிகளுக்கான நேர்முகப்பரீட்சைகளில் வெளிப்படையான புள்ளியிடும் முறைமையை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
அத்துடன், திணைக்கள தொழிலாளர்களின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், களப்பணிகளுக்குத் தேவையான வாகன வசதிகள் மற்றும் எரிபொருள் கொடுப்பனவுகளை வழங்குதல், கால்நடை வைத்திய அதிகாரிகளின் தொழில்சார் மற்றும் நிர்வாகச் செயற்பாடுகளில் லிப்கோ (LIBCO) கூட்டுறவுச் சங்கங்களின் தேவையற்ற தலையீடுகளை நிறுத்துதல் ஆகியவையும் கோரிக்கைகளில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தத்தால் பண்ணையாளர்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களுக்கு வருத்தம் தெரிவித்துள்ள சங்கம், தங்களது போராட்டம் பண்ணையாளர்களுக்கு எதிரானதல்ல என்றும், தரமான மற்றும் நிலையான கால்நடை மருத்துவச் சேவையை உறுதிப்படுத்தும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.
கோரிக்கை
வேலைநிறுத்த காலப்பகுதியில் வட மாகாணத்திலுள்ள அரச கால்நடை வைத்திய அதிகாரிகளின் கள விஜயங்கள், மருத்துவ ஆலோசனைகள், நிர்வாகக் கடமைகள் மற்றும் அரச கால்நடை அபிவிருத்தித் திட்டங்களுடன் தொடர்புடைய வழமையான சேவைகள் 24 மணித்தியாலங்களுக்கு இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளுக்கு உடனடி மற்றும் நடைமுறைப்படுத்தக்கூடிய தீர்வுகள் வழங்கப்படாவிட்டால், எதிர்காலத்தில் மேலும் விரிவான தொழிற்சங்க நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படக்கூடும் என வட மாகாண அரச கால்நடை வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரித்துள்ளது.
பண்ணையாளர்களின் நலனையும் வட மாகாண கால்நடைச் சேவையின் தொடர்ச்சியையும் கருத்தில் கொண்டு, மாகாண மற்றும் மத்திய அரசின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு நிலையான தீர்வுகளை வழங்க வேண்டும் என சங்கம் வலியுறுத்தியுள்ளது.