தமிழ்நாட்டில் 20 நாட்கள் முன்னெடுத்த தொப்புள்கொடி பயணம் தொடர்பில் திருகோணமலையில் மாநாடு
வடக்கு - கிழக்கின் எட்டு மாவட்டங்களையும் சேர்ந்த 10 பெண்கள், ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலைக்கு நீதி கோரியும், தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா 2013ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய தீர்மானத்தை நடைமுறைப்படுத்த வலியுறுத்தியும், தமிழ்நாட்டில் 48க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகளைச் சந்தித்து தமது கோரிக்கைகளை முன்வைத்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் மாதம் 4ஆம் திகதி இந்தியாவின் தமிழ்நாட்டுக்குப் பயணமான குறித்த பெண்கள், 20 நாட்கள் அங்கு தங்கியிருந்து ஈழத் தமிழ் மக்களின் குரலாக பல்வேறு அரசியல் தலைவர்கள், மக்கள் பிரதிநிதிகள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை சந்தித்து, ஈழத் தமிழர்களுக்கு நீதி கிடைக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினர்.
சந்தித்த பிரதிநிதிகள்
இதன்போது, தி.மு.க. முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், பேரறிவாளனின் தாயார் அற்புதம் அம்மாள் புதுச்சேரி முதலமைச்சர் ந.ரங்கசாமி , புதுச்சேரி அமைச்சர் பெ.ராஜவேலு முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.பாஸ்கர், சட்டமன்ற உறுப்பினர் ஞானதாஸ் வி.விக்னேஸ்வரன், மலேசியாவின் பினாங்கு மாநில முன்னாள் துணை முதல்வரும், மலேசிய உரிமைக் கட்சியின் தலைவருமான பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி, தருமபுரி சட்டமன்றத் தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி (பாமக) சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி, தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள், திரைப்பட இயக்குநர்கள், புலவர்கள், சட்டத்தரணிகள், தொழிலதிபர்கள், வைத்தியர்கள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்களையும் ஈழத் தமிழ்ப் பெண்கள் குரல் பிரதிநிதிகள் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர்.

இப்பயணத்தின் ஒரு பகுதியாக, தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர்களான எம்.ஜி.ஆர்., கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் நினைவிடங்களுக்கும் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
திருகோணமலையில் மாநாடு
தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட இந்தத் தொப்புள்கொடி பயணத்தைத் தொடர்ந்து இலங்கைக்குத் திரும்பிய பெண்கள், கடந்த வாரம் திருகோணமலையில் மாநாடு ஒன்றையும் நடத்தியுள்ளனர்.

குறித்த மாநாட்டில் மதகுருமார்கள், திருகோணமலை மாநகர சபை முதல்வர் க. செல்வராஜா, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா. சிறீநேசன் மற்றும் இ. சிறீநாத், அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க. கோடீஸ்வரன், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சீ. யோகேஸ்வரன், திருகோணமலை மாநகர சபை உறுப்பினர் ர.விஜயதர்சினி, ஓய்வுநிலை அதிபர், சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
தமிழகத்தில் முன்னெடுக்கப்பட்ட சந்திப்புகள் மற்றும் கலந்துரையாடல்களின் ஊடாக ஈழத் தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கைகளைப் பரந்துபட்ட தரப்பினரிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


