ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை:இலங்கை தொடர்பில் பல பரிந்துரைகள்
ஜெனிவா மனித உரிமை பேரவையின் 49 வது கூட்டத் தொடரில் சமர்ப்பிக்க உள்ள ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளத. இந்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் மனித உரிமை பேரவையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதுடன் விவாதமும் நடைபெறவுள்ளது.
17 பக்கங்களை கொண்ட அந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மனித உரிமை ஆணையாளர் மிஷேல் பெஷல்,(Michelle Beschel) இந்த அறிக்கை ஊடாக பல விடயங்கள் சம்பந்தமாக கவனத்தை செலுத்தியுள்ளதுடன் பரிந்துரைகளையும் முன்வைத்துள்ளார்.
இம்முறை அறிக்கையை தயாரிக்கும் முன்னர் பிரதிநிதிகளை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை அரசாங்கம் அழைப்பு விடுத்திருந்தது. எனினும் கோவிட் தொற்று நோய் நிலைமை காரணமாக மனித உரிமை ஆணைக்குழுவின் பிரதிநிதிகள் இணையத்தளம் வழியாக பல தகவல்களை திரட்டியுள்ளனர்.
இந்த நடவடிக்கை தொடர்பாக மனித உரிமை ஆணையாளர் இலங்கை அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
எவ்வாறாயினும் இலங்கை சிவில் சமூகத்தின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கும் வகையில் இராணுவமயமாக்கல் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இராணுவ அதிகாரிகள் அரசாங்கத்தின் நிர்வாகத்துறையில் உயர் பதவிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ளமை தொடர்பாகவும் மனித உரிமை ஆணையாளர் தனது கவனத்தை செலுத்தியுள்ளார்.
மேலும் இலங்கையின் வடக்கில் நிலவும் காணி பிரச்சினை குறித்தும் அறிக்கையில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி தேசிய நல்லிணக்கத்தை பாதிக்கும் அரசாங்கம் சில நியமனங்களை செய்து இருப்பதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைமை பதவிக்கு பொதுபல சேனா அமைப்பின் பிக்கு நியமிக்கப்பட்டுள்ளமை, போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் அனுராதபுரத்தில் நினைவு தாது கோபுரம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவிக்கு பிக்கு நியமிக்கப்பட்டமை என்பனவும் மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளது.
மேலும் சிவில் சமூக செயற்பட்டாளர்களை பின் தொடரும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளதுடன் சில சம்பவங்களும் உதாரணமாக காட்டப்பட்டுள்ளன.
இதனை தவிர கடந்த காலத்தில் பொலிஸார் கைது செய்து இருந்த நிலையில் கொலை செய்யப்பட்ட சந்தேக நபர்கள் தொடர்பாகவும் மனித உரிமை ஆணையாளர் கவனத்தை செலுத்தியுள்ளார்.
இது சம்பந்தமாக இலங்கையின் சட்டத்துறையினரும் அரசாங்கத்திற்கு விடயங்களை முன்வைத்துள்ளதாக அவர் நினைவுகூர்ந்துள்ளார். பயங்கரவாத தடுப்பு சட்டத்திற்கு அண்மையில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை பாராட்டுவதாகவும் அந்த நடவடிக்கைகளை துரிதப்படுத்தி, நிறைவு செய்வது அவசியம் எனவும் மனித உரிமை ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் ஹிஜாஸ் ஹிஸ்புல்லா போன்ற சட்டத்தரணிகள் கைது செய்யப்பட்டமை. அந்த கைது தொடர்பாக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட விதம் பற்றியும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் திருத்தச் சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் வரை அந்த சட்டத்தின் கீழ் தொடர்ந்தும் நடவடிக்கைகளை எடுப்பதை நிறுத்துமாறும் மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் கோரியுள்ளார்.
அத்துடன் நீதியை நிலை நாட்டுவது சம்பந்தமாக அண்மைய காலத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் குறித்து மனித உரிமை ஆணையாளர் தனது அறிக்கையில் கவனத்தை செலுத்தியுள்ளார்.
11 இளைஞர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டமை சம்பந்தமான முன்னாள் கடற்படை தளபதியின் வழக்கு விசாரணைகளின் முன்னேற்றம் மாத்திரமல்லாது அவர் அரச பதவிக்கு நியமிக்கப்பட்டமை பற்றியும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் சில வழக்குகளை திரும்ப பெற தீர்மானித்தமை தொடர்பானவும் மனித உரிமை ஆணையாளர் கூடிய கவனத்தை செலுத்தியுள்ளார்.
அதேவேளை அறிக்கையில் பரிந்துரைகளை முன்வைத்துள்ள மனித உரிமை ஆணையாளர், அனைத்து மக்களின் மனித உரிமைகளும் பாதுகாக்கப்படும் வகையில் நிறுவனங்களை வலுப்படுத்தும் புதிய அரசியலமைப்புச் சட்டத்தை துரிதமாக கொண்டு வர வேண்டும்.
சந்தேக நபர்களை கைது செய்யும் போது சர்வதேச மனித உரிமை சட்டத்திற்கு அமைய சந்தேக நபர்கள் தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஊடாக நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
ஈஸ்டர் ஞாயிறு தொடர் தாக்குதல் சம்பந்தமான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை பகிரங்கப்படுத்த வேண்டும் என மனித உரிமை ஆணையாளர் பரிந்துரைத்துள்ளார்.
இதனிடையே 2021 ஆம் ஆண்டு தனது அறிக்கையின் மூலம் சுட்டிக்காட்டிய விடயங்கள் தொடர்பில் மீண்டும் வலியுறுத்தியுள்ள ஆணையாளர், பாரதூரமான மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக நடவடிக்கைகளை எடுத்து, அவற்றுக்கு தேவையான நகர்வுகளை மேற்காள்ள வேண்டும் என உறுப்பு நாடுகளுக்கு நினைவூட்டியுள்ளார்.
பாதூரமான மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக தடைகளை விதிக்கும் இயலுமை தொடர்பாகவும் அவர் விடயங்களை முன்வைத்துள்ளார்.
மேலும் ஐக்கிய நாடுகள் அமைதிப்படைக்கு இலங்கை வழங்கி வரும் பங்களிப்பு தொடர்பான விடயத்தை மீண்டும் மீளாய்வு செய்யுமாறு மனித உரிமை ஆணையாளர், ஐக்கிய நாடுகள் அமைப்பின் இணை அமைப்புகளுக்கு யோசனை முன்வைத்துள்ளார்.

25 நிமிடம், 24 தாக்குதல்கள்: குறிவைக்கப்பட்ட 9 பயங்கரவாத முகாம்கள், 70 பேர் பலி! பாகிஸ்தானில் இந்தியா அதிரடி News Lankasri
