பிரித்தானியாவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் நீக்கம்! - அரசின் அறிவிப்பு வெளியானது
பிரித்தானியாவில் விரைவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளையும் நீக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
"தரவுகளில் தற்போதைய ஊக்கமளிக்கும் போக்குகள் தொடர்வதால் சுய-தனிமைப்படுத்துவதற்கான சட்டத் தேவை உட்பட, அனைத்து கட்டுப்பாடுகளையும் முடிவுக்கு கொண்டுவர முடியும் என அவர் கூறியுள்ளார்.
தற்போது அமுலில் இருக்கும் கட்டுப்பாடுகள் மார்ச் 24ம் திகதி வரை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பெப்ரவரியில் கோவிட் கட்டுப்பாடுகளை நீக்க பிரதமர் திட்டமிட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விடயம் தொடர்பில் பிரதமரின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெளிவுப்படுத்தியுள்ளார்,
கோவிட் இருந்தால், மக்கள் வேலைக்குச் செல்லலாம் என்று இந்த மாற்றத்தை அர்த்தப்படுத்த முடியுமா என்று கேட்டதற்கு,
"எனவே வழிகாட்டுதல் இருக்கும், நாங்கள் பரிந்துரைப்பது அப்படி இருக்காது. நாங்கள் செய்வது உள்நாட்டு விதிமுறைகளை நீக்குதவது தான். தனிமைப்படுத்தலுடன் தொடர்புடையது.
"ஆனால் வெளிப்படையாக காய்ச்சல் உள்ள ஒருவரை வேலைக்குச் செல்ல நாங்கள் பரிந்துரைக்க மாட்டோம், அவர்களுக்கு தொற்று நோய் இருக்கும்போது யாரும் வேலைக்குச் செல்ல பரிந்துரைக்க மாட்டோம்." என தெரிவித்துள்ளார்.
கடந்த மாத இறுதி நிலவரப்படி, பிரித்தானியாவில் கோவிட்-19 நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஐந்தாவது நாள் மற்றும் ஆறாவது நாள் எதிர்மறையாகச் சோதனை செய்தால், ஐந்து நாட்களுக்குப் பிறகு அவர்கள் சுய-தனிமைப்படுத்தலை முடித்துக் கொள்ளமுடியும்.
இதேவேளை, மக்கள் முகக்கவசம் கட்டாயமாக அணியத் தேவையில்லை என்ற அறிவிப்பும் அண்மையில் வெளியிடப்பட்டிருந்தது. மக்கள் ஒன்றுகூடலுக்கான பெரிய இடங்களுக்குள் நுழைவதற்கு இனி தடுப்பூசிச் சான்றுகள் தேவையில்லை எனவும் பிரித்தானிய அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது.
மக்கள் வீட்டிலிருந்து வேலை செய்வதை ஊக்குவிப்பதையும் அரசாங்கம் நிறுத்தியுள்ளது. அத்துடன், மாணவர்கள் வகுப்பறைகளில் முகக்கவசம் அணியுமாறு ஆலோசிக்கப்படுவதும் நிறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில், விரைவில் அனைத்து கோவிட் கட்டுப்பாடுகளும் நீக்கப்படும் என பிரதமர் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.