காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வு தொடர்பில் ஜனாதிபதியிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கை : திலீபன்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்பாக ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம் எனவும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு பரிகாரம் வழங்கப்படும் என வன்னி மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் இன்று(13) இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
''இப்போது இந்த அரசாங்கம் சர்வகட்சி அரசாங்கம் போன்று தான். அனைத்து கட்சிகளிலும் உள்ள உறுப்பினர்கள் எமது ஆளுந்தரப்பில் இணைந்துள்ளார்கள் ஒரு சிலரைத் தவிர, ஆனால் அந்த ஒரு சிலரும் எமது ஆளுங்கட்சிக்கு வாக்களித்தவர்கள் தான். ஜனாதிபதி அனைத்து கட்சிகளையும் தம்முடன் பேசி சர்வகட்சியில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளார்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்
இதில் சிலர் தலையையும், வாலையும் காட்டும் நிலை காணப்படுகின்றது. இன்னும் ஒரு சில நாட்களில் எல்லாம் சரியாகி விடும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் 2000 ஆம் நாளை கடந்துள்ளது.
இதில் பலர் பலவிதமான கருத்துக்களை முன்வைக்கிறார்கள். இந்த போராட்டம் முதன் முதலில் வவுனியா மாவட்டத்தில்தான் ஆரம்பிக்கப்பட்டது.
வெறும் 12 பேருடன் வவுனியா தபால் நிலையம் முன்பாக ஆரம்பிக்கப்பட்டது. அந்த 12 பேரில் நானும் ஒருவன். எனது நண்பர்கள், உறவுகளுடன் இணைந்து கட்சி பேதமின்றி எவ்வித அரசியலுமின்றி இந்த போராட்டத்தை முன்னெடுத்தோம்.
அரசியல்வாதிகளின் பின்புலத்தால்
ஆனால் நாட்கள் செல்ல செல்ல சில அரசியல்வாதிகளின் பின்புலத்தால் போராட்டத்தில் உள்ள சிலர் வேறு பாதையை நோக்கி செல்லக் கூடிய நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம் தொடர்பாகவும் எமது அமைச்சர் ஊடாக ஜனாதிபதியிடம் கோரிக்கையை முன்வைத்துள்ளோம்.
நானும் ஒரு தமிழ் மகனாக அவர்களுக்கான பரிகாரம் கிடைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கின்றேன். காணாமல் ஆக்கப்பட்டோருக்கான ஒரு பரிகாரம் வழங்கப்படும்.
விரைவில் அதனை எழுத்து
வடிவில் கொடுக்கவுள்ளோம். இது தொடர்பில் கலந்துரையாடி தீர்வு எட்டப்பட்ட பின் அதனை
வெளிப்படுத்த முடியும்’’ எனத் தெரிவித்துள்ளார்.