தமிழரசுக் கட்சியை ஒற்றுமைக்குள் கொண்டு வர வேண்டும்: செல்வம் எம்.பி சுட்டிக்காட்டு
தமிழரசுக் கட்சியை ஒதுக்கிவிட முடியாது என்றும், அதனை ஒற்றுமைக்குள் கொண்டு வர வேண்டும் எனவும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோவின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்..
வவுனியாவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
சரியான நெறிப்படுத்தல்
எந்த தேர்தலையும் சந்திப்பதற்கும் நாம் தயாராக தான் இருக்கின்றோம். ஜனாதிபதித் தேர்தல் ஒன்று நடந்தால் அதில் போட்டியிடும் வேட்பாளர்கள் இனப்பிரச்சனை சார்ந்து தமிழ் தரப்பிற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.
வெறுமனே கருத்துச் சொல்லிவிட்டு ஏமாற்றுகின்ற நிலைமையினை இம்முறை மக்கள் ஏற்கமாட்டார்கள். அதற்கு உடந்தையாக நாங்களும் இருக்கமாட்டோம். பொதுவேட்பாளர் விடயத்தை நாம் சரியாக கையாளவேண்டும்.
ஒருவரை நிறுத்திவிட்டு சொற்ப வாக்குகளை பெறும் நிலை இருந்தால் ஒட்டுமொத்த தமிழினத்தின் மானமே போய்விடும். எனவே சரியான நெறிப்படுத்தலின் ஊடகவே அந்த விடயத்தை செய்யவேண்டும்.
ஒற்றுமையாக செயற்பட வேண்டும் என நாங்கள் விரும்புகின்றோம். ஐ.நாவுக்கு கடிதம் எழுதுவது, பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுவது ஒற்றுமையக சேர்ந்து செய்தோம்.
எமது மாநாட்டில் வலுவான ஒரு கோரிக்கையினை முன்வைக்க இருக்கின்றோம். எங்களிடத்தில் ஒற்றுமை இல்லை என்று ஏளனப்படுத்தும் விமர்சனத்தை தொடர்ச்சியாக சந்திக்கின்றோம்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |