வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை மீள வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: ஜனாதிபதி
வடக்கில் யுத்தத்தினால் இழந்த வருமானத்தை மீள வழங்குவதற்கான அபிவிருத்தி வேலைத்திட்டங்களை துரிதப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
யாழ்.மாவட்டச் செயலகத்தில் இன்று (06) யாழ்.மாவட்ட சர்வ மதத் தலைவர்களுடன் இடம்பெற்ற சந்திப்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொருளாதார அபிவிருத்தி
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“வடமாகாண பாதுகாப்புப் பிரிவினரின் கீழ் உள்ள பகுதிகளில் உள்ள கோயில்கள் மற்றும் தேவாலயங்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் வழங்கப்படுவதுடன், அந்த மத ஸ்தலங்களை மீளமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
பொருளாதார அபிவிருத்திக்கு மத நல்லிணக்கம் மிகவும் முக்கியமானது. அனைத்து மதத் தலைவர்களும் நல்லூர் ஆலய பொறுப்பாளர்கள் விரும்பினால் நல்லூர் ஆலயத்தை விட பெரிய ஆலயத்தை அமைக்க முடியும்.
கிறிஸ்தவ தேவாலயங்களில் நிலவும் பிரச்சினைகள் தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பாக மடு தேவாலயத்தில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு காணப்படும்.
யுத்த காலத்தில் முஸ்லிம் மக்கள் இந்தப் பிரதேசங்களை விட்டு வெளியேறியவர்கள் மீள்குடியேறுவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.
கலாசார விழுமியங்கள்
இனம் மற்றும் மதம் என்ற அடிப்படையில் பிளவுபட வேண்டிய அவசியமில்லை. அனைத்து மக்களினதும் உரிமைகளைப் பெற்றுக் கொண்டு ஒரு நாடாக முன்னோக்கிச் செல்ல வேண்டும்.
அனைத்து மதம் தொடர்பிலும் செயற்பட புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் கீழ் ஆலோசனைக் குழுக்களை நியமிப்பது குறித்து ஆலோசித்து வருகிறேன்.
அத்துடன், நாட்டின் சமய மற்றும் கலாசார விழுமியங்களை முன்வைத்து நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியும்.
அநுராதபுரம் மற்றும் கண்டியை மையப்படுத்தி பௌத்த சமய கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதாகவும், யாழ்ப்பாணம் மற்றும் தெற்கு கைலாயத்தை மையப்படுத்தி இந்து சமய கலாசாரத்தை மேம்படுத்தும் வகையில் ஊக்குவிப்பு திட்டத்தை உருவாக்க எதிர்பார்த்திருப்பதாகவும் அது பற்றிய அறிக்கையை அவருக்கு வழங்கவும் அறிவுறுத்தப்பட்டது.
சமய ஒற்றுமை
இந்நாட்டின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு இந்த செயற்பாடுகள் பெரும் உறுதுணையாக அமையும். வடமாகாண சமய ஒற்றுமையைப் பாதுகாப்பதற்கு அனைத்து அரசியல்வாதிகளும் மதத் தலைவர்களும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்.
வடக்கில் மத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக வடமாகாண ஆளுநரிடம் அனைத்து மதத் தலைவர்களுடன் கலந்துரையாடி அரசாங்கம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்துத் தெரிவிக்க வேண்டும்.
எந்தவொரு மதத்திற்கும் அநீதி இழைக்காத வகையில் அனைத்து சமய திணைக்களத்தின் கீழ் பணிகள் மேற்கொள்ளப்படும்” என தெரிவித்துள்ளார்.
இந்நிகழ்வில் ஆர். ஏ. ரலீம் மௌலவி உட்பட சர்வ மதத் தலைவர்கள் மற்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, யாழ்.மாவட்ட செயலாளர் எஸ். சிவபாலசுந்தரன், ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரிய, ஜனாதிபதி சமூக அலுவல்கள் பணிப்பாளர் நாயகம் ரஜித் கீர்த்தி தென்னகோன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |