வடக்கு - கிழக்கின் ஆதரவை கோரும் காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கம்: போராட்டத்திற்கு பகிரங்க அழைப்பு
பன்னாட்டுச் சமூகத்தின் நீதிக்கான தலையிடலை வலியுறுத்தி காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகளினால் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான எதிர்வரும் 30ஆம் நாளன்று நாம் முன்னெடுக்கவுள்ள போராட்டத்திற்கு நிலத்திலும் புலத்திலும் தமிழ்நாட்டிலும் உள்ள அமைப்புக்களும் பிரதிநிதிகளும், மக்களும் ஒத்துழைப்பை வழங்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் ஊடக அமையத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் போராட்டத்திற்கான பகிரங்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சர்வதேச விசாரணை
வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட இனவழிப்புக்கு சர்வதேச விசாரணை வழியாகவே நீதி
வழங்க வேண்டும் என்பதை மீண்டும் வலியுறுத்தி நிற்கின்றோம்.
2700 நாட்களை கடந்தும் கடந்த 15 ஆண்டுகளாகவும் தெருவில் நின்று எம் பிள்ளைகளின் விடுதலைக்கும் நீதிக்குமாக தொடரும் போராட்டத்தை ஸ்ரீலங்கா அரசினால் ஒருபோதும் அடக்கி ஒடுக்க முடியாது.
பன்னாட்டு நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்பதையும் நாம் மீண்டும் ஸ்ரீலங்கா அரசுக்கு நினைவுபடுத்துகின்றோம்.
ஆகஸ்ட் 30ஆம் நாள் பன்னாட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாகும் அன்றைய நாளில் வடக்கு கிழக்கு தழுவிய ரீதியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நீதிக்கும் விடுதலைக்குமான போராட்டத்தை நடாத்த இருக்கின்றோம்.
காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள்
அது தொடர்பான தெளிவுபடுத்தலாக இந்த அறிக்கையை வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்களின் சங்கத்தினராகிய நாம் ஊடகங்களுக்கு வெளிப்படுத்துகின்றோம்.
உலகமெங்கும் காணாமல் ஆக்கப்படுதல் என்பது ஒரு ஆயுதமாகவே கையாளப்படுவதாக ஐ.நா கூறுகின்றது.
அதாவது ஜனநாயகத்திற்கு எதிரான மனித உரிமைகளுக்கு எதிரான இனங்களுக்கு எதிரான ஒரு ஆயுதமாக பிரயோகிக்கப்படுகின்றது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |