மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு கோரி செய்த விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிப்பு
முல்லைத்தீவில் மாவீரர் நாளுக்கு தடையுத்தரவு கோரி மீண்டும் பொலிஸார் செய்த
விண்ணப்பம் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர்களுக்கு பொதுவான நினைவுகூரல்களை மேற்கொள்ள முடியும்.இறந்தவர்கள் அவர் யாராக இருந்தாலும் அவரை நினைவு கூருவது மானிடப்பண்பு என்று குறிப்பிட்டு நேற்றைய தினம்(25) ஏற்கனவே 17 ம் மற்றும் 23 ம் திகதிகளில் வழங்கிய மாவீரர் நிகழ்வுக்கு எதிரான கட்டளையை இறந்தவர்களை நினைவுகூருவதற்கு எந்த தடையும் இல்லை என்பதாக திருத்தியமைத்து முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா கட்டளையாக்கியிருந்தார்.
இந்நிலையில் இன்று(26) மீண்டும் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஏழு பொலிஸ் நிலைய பொலிஸாரினாலும் நகர்த்தல் பத்திரம் தாக்கல் செய்து குறித்த நினைவுகூரலுக்கான தடையுத்தரவை வழங்குமாறு மீண்டும் விண்ணப்பம் செய்தனர்.
குறித்த வழக்கு விசாரணைகள் இன்று (26) மீண்டும் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுக்கப்பட்டபோது பொலிஸார் தடையுத்தரவை வழங்குமாறு பல்வேறு சமர்ப்பணங்களை முன்வைத்திருந்தனர்.
இதன்போது தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் சார்பாக சட்டத்தரணிகளான க.கணேஸ்வரன் , ருஜிக்கா நித்தியானந்தராசா,எஸ் மதுரா ஆகிய சட்டத்தரணிகள் குறித்த வழக்கில் ஆஜராகி பிரதிவாதிகள் சார்பில் மன்றுக்கு எடுத்துரைத்தனர்.
இரண்டு தரப்பு நியாயங்களையும் செவிமடுத்த முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா பொலிஸாரின் விண்ணப்பத்தை நிராகரித்து ஏற்கனவே நேற்றைய தினம் (25) கட்டளை வழங்கினார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுகளை நடத்துவதற்கு கடந்த 17ஆம் திகதி மற்றும் 23 ஆம் திகதிகளில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த அரசியல் பிரமுகர்கள் உள்ளிட்ட எழுபத்திரண்டு பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்டிருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லைத்தீவு,முள்ளியவளை ஒட்டுசுட்டான், மாங்குளம், மல்லாவி ஐயன்குளம், புதுக்குடியிருப்பு ஆகிய ஏழு பொலிஸ் நிலையங்களின் கோரிக்கைக்கு அமைய குறித்த எழுபத்திரண்டு பேருக்கான தடை உத்தரவுகள் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்டிருந்தது.
மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்வுக்கான தடை உத்தரவை நீக்கக்கோரி நகர்த்தல் பத்திரம் ஊடாக வழக்கு விசாரணைகள் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் நேற்று (25) இடம்பெற்றது.
இதனடிப்படையில் குறித்த திருத்திய கட்டளையை முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜா வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார்
மன்னாரில் நாளைய தினம் சனிக்கிழமை (27) ஆம் திகதி மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க உள்ளதாக கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட 6 பேருக்கு எதிராக மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை(26) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் மேற்கொள்ளப்பட்ட விண்ணப்பத்தை மன்னார் நீதவான் நிராகரித்துள்ளார்.
தமக்கு கிடைத்த புலனாய்வு தகவலின் அடிப்படையில் நாளைய தினம் சனிக்கிழமை (27) ஆம் திகதி மன்னாரில் மாவீரர் தினம் அனுஷ்டிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளதாகவும், எனவே நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் , மன்னார் நகர முதல்வர் ஞானப்பிரகாசம் அன்ரனி டேவிட்சன்,உப தவிசாளர் எஸ்.ஜாட்சன், நகர சபை உறுப்பினர் எஸ்.ஆர்.குமரேஸ் மற்றும் தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ்.சிவகரன் ஆகிய 6 பேருக்கும் எதிராக மாவீரர் தினத்தை அனுஷ்டிக்க தடை விதிக்க கோரி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (26) மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விண்ணப்பம் செய்யப்பட்டது.
இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் போதிய சாட்சிகள் மன்றில்
சமர்ப்பிக்கப்படாமையினால் , மன்னார் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியினால்
மன்னார் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தை மன்னார் நீதவான்
நிராகரித்தார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
