நிராகரிக்கப்பட்ட வேட்புமனு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதால் சர்ச்சை
வவுனியா மாவட்ட உள்ளுராட்சி மன்ற தேர்தலில் வவுனியா வடக்கு பிரதேச சபைக்கு வேட்புமனுத் தாக்கல் செய்திருந்த ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் (சங்கு) வேட்புமனு முதலில் நிராகரிக்கப்பட்டதாகவும் பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவித்தமையானது குழப்ப நிலையை தோற்றுவித்துள்ளது.
முதலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக கட்சி பிரதிநிதிகளின் கூட்டத்தில் மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரால் கூறப்பட்டது. பின்னர் ஊடக சந்திப்பிலும் அது உறுதிப்படுத்தப்பட்டது.
ஊடகசந்திப்பு முடிவடைந்து சில நிமிடங்களில் மீள ஊடக சந்திப்பு நடைபெற்றுள்ளது.
வேட்பு மனுத் தாக்கல்
இதன்போது குறித்த வேட்புமனு ஏற்றுக் கொள்ளப்பட்டதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திரவால் அறவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் பலரும் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
வவுனியா மாவட்டத்தில் நேற்று மதியம் 12 மணியுடன் வேட்பு மனுத் தாக்கல் நிறைவு பெற்ற பின்னர் 1 மணிக்கு கட்சி முகவர்கள், சுயேட்சைகுழு முகவர்கள் மற்றும் கட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இதன்போது மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் பீ.ஏ.சரத்சந்திர தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலில் பெண் பிரதிதித்துவம் தொடர்பில் உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்படாமை காரணமாக ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணி வேட்புமனு வவுனியா வடக்கில் நிராகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்போது குறித்த கட்சி பிரதிநிதிகளும் அமைதியாக இருந்துள்ளனர். அதன்பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலும் வவுனியா வடக்கில் 09 கட்சிகளும், 2 சுயேட்சை குழுக்களும் வேட்புமனு தாக்கல் செய்தாகவும் அதில் ஒரு கட்சி, 2 சுயேட்சை நிராகரிக்கப்பட்டதாகவும் மாலை 4 மணிக்கு கூறப்பட்டது.
ஊடக சந்திப்பு
இருப்பினும் ஊடக சந்திப்பு நிறைவடைந்து பல ஊடகவியலாளர்கள் வெளியேறிய பின் மீண்டும் அழைத்து வவுனியா வடக்கில் 9 கட்சிகளும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாகவும், 2 சுயேட்சைக் குழுக்கள் மாத்திரம் நிராகரிக்கப்பட்டதாகவும் கூறப்பட்டது.
இதற்கு தொழில் நுட்ப கோளாறு காரணம் எனவும் கூறப்பட்டது.
அப்படியெனில் நிராகரிக்கப்பட்ட ஏனைய கட்சிகளுக்கும் தொழில் நுட்ப கோளாறு தொடர்பில் கேள்வி எழுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.
இதேவேளை, கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது நிராகரிக்கபட்ட ஜனநாயக தேசிய கூட்டணி (தபால் பெட்டி) கட்சி வவுனியா மாவட்ட தேர்தல் திணைக்களம் எடுத்த முடிவு தவறு என உயர் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து, நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பையடுத்து விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு தேர்தலில் போட்டியிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |