சர்ச்சைக்குரிய மருந்து விவகாரம்: சுகாதார செயலாளரிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம்
சுகாதார அமைச்சின் செயலாளர் ஜனக்க ஸ்ரீ சந்திரகுப்தவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.
இலங்கையில் பல நோயாளர்களுக்கு சிக்கல்களை ஏற்படுத்திய இம்யூனோகுளோபுலின் என்ற மருந்தை உற்பத்தி செய்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் ஆரம்பித்த விசாரணைகளுக்கு அமையவே மேற்படி வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளர் மற்றும் தேசிய இரத்தமாற்ற சேவையின் பணிப்பாளர் ஆகியோரிடம் தனித்தனியாக வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
முதற்கட்ட விசாரணை தகவல்
சர்ச்சைக்குரிய இம்யூனோகுளோபுலின் ஆன்டிபாடி மருந்தை இலங்கைக்கு இறக்குமதி செய்ததாக கூறிய நிறுவனத்தின் உரிமையாளர் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த மருந்து இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டதாக கூறப்பட்ட போதிலும், அவை இந்த நாட்டிலேயே தயாரிக்கப்பட்டவை என குற்றப் புலனாய்வுப் பிரிவினர் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த பின்னணியில், சம்பந்தப்பட்ட மருந்து தயாரிப்பதற்காக தேசிய இரத்த சேவையில் இருந்து இரத்தம் எடுக்கப்பட்டதாக சுகாதார நிபுணர் சங்கங்கள் வாக்குமூம் வழங்கியுள்ளன.