பாரியளவில் குறைந்துள்ள அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை
கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களுடன் ஒப்பிடுகையில் நவம்பர் மாதமளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் பாரிய அளவில் குறைவடைந்துள்ளதாக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
அண்மையில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அமைச்சர்களின் ஆலோசனைக் குழு கூட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
சந்தையில் உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு பெருமளவு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதங்களில் வெளிச் சந்தையின் விலைகளை ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நவம்பர் மாதம் வரை விலைக் குறைப்பு மூலம் நுகர்வோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
பாரியளவில் குறைந்துள்ள விலை
இதன்படி, ஜூலை மாதம் வெளிச்சந்தையில் ஒரு கிலோகிராம் பருப்பு ரூ.595 ஆக இருந்தது, டிசம்பரில் லங்கா சதொச மூலம் ஒரு கிலோகிராம் பருப்பு ரூ.389 ஆக குறைந்துள்ளது.
வெளிச்சந்தையில் 410 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் கோதுமை மா டிசம்பர் மாதத்தில் லங்கா சதொச விற்பனை நிலையங்களில் 265 ரூபாவாக குறைந்துள்ளது.
280 ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலையை 229 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் சம்பா அரிசியின் விலையை 225 ரூபாவிலிருந்து 198 ரூபாவாக குறைக்க சதொச நிறுவனத்தால் முடிந்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.