பிரித்தானியாவின் பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை! - தயார் நிலையில் இராணுவம்
தென்மேற்கு இங்கிலாந்து மற்றும் தெற்கு வேல்ஸின் பகுதிகளுக்கு வெள்ளியன்று ஒரு அரிய சிவப்பு வானிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், உயிருக்கு ஆபத்து ஏற்படக் கூடும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
யூனிஸ் புயல் மணிக்கு 90 மைல் வேகத்தில் வீசக்கூடும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது. வீடுகளுக்கு சேதம், ரயில்கள் போக்குவரத்து ரத்து மற்றும் மின்வெட்டு போன்றவையும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சிவப்பு எச்சரிக்கை வெள்ளிக்கிழமை 07:00 GMT முதல் 12:00 GMT வரை நடைமுறையில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, டெவோன், கார்ன்வால் மற்றும் சோமர்செட் கடற்கரை மற்றும் வேல்ஸின் தெற்கு கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மில்லியன் கணக்கான மக்கள் புயலின் போது வீட்டிலேயே இருக்குமாறு வலியுறுத்தப்படுகிறார்கள்.
வெள்ளிக்கிழமை மாலை 05:00 மணி முதல் இரவு 09.00 மணி வரை வேல்ஸின் மற்ற பகுதிகளிலும், இங்கிலாந்தின் வடக்கே மான்செஸ்டர் வரையிலும் காற்றின் குறைந்த அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வேல்ஸில் உள்ள அனைத்து ரயில் சேவைகளும் வெள்ளிக்கிழமை இடைநிறுத்தப்பட்டுள்ளன. வெல்ஷ் கவுன்சில்கள் மற்றும் சோமர்செட் கவுண்டி கவுன்சில் வெள்ளிக்கிழமை பாடசாலை மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
டெவோன் மற்றும் கார்ன்வால் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதுடன், பாடசாலைகளை திறக்க வேண்டாம் என்று பிரிஸ்டல் நகர சபை அறிவுறுத்தியதாகக் கூறப்படுகின்றது.
வரவிருக்கும் புயலை எதிர்கொள்வது குறித்து விவாதிக்க அரசாங்கம் அவசர கோப்ரா கூட்டத்தை நடத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவர்களை மீட்க இராணுவம் தயார் நிலையில் இருப்பதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார்.