நாட்டின் சில பகுதிகளுக்கு சிவப்பு அறிவித்தல் : நீடிக்கப்பட்ட அபாய எச்சரிக்கை
எதிர்வரும் 36 மணித்தியாலங்களில் நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இது குறித்து விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
மழைவீழ்ச்சி
இதற்கமைய, மேல்,சப்ரகமுவ, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பாகங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில பாகங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன், திருகோணமலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் வீசும் காற்றின் வேகம் 40 - 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப்பெருக்கு
தென்மேற்கு பருவமழை தொடங்கியதை தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் பல ஆறுகளில் நீர்மட்டம் உயர்ந்து சிறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இதேவேளை, சீரற்ற காலநிலை காரணமாக பல பகுதிகளில் உள்ள வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர்கள் தெரிவித்தனர்.
சிவப்பு எச்சரிக்கை
கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, மாத்தறை, நுவரெலியா மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு நாளை மாலை 4.30 மணி வரை மண்சரிவு அபாயத்தை நீடிக்க தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) நடவடிக்கை எடுத்துள்ளது.
இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி, கலவான, எலபாத, குருவிட்ட மற்றும் எஹலியகொட பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆபத்தான பிரதேசங்களில் வசிக்கும் மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.