பூசா சிறைச்சாலையிலிருந்து கைப்பேசிகள் மீட்பு
கடும் குற்றங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் பூசா சிறைச்சாலையில் ஐந்து கைப்பேசிகள் மற்றும் சார்ஜர்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
காலி மாவட்டத்தின் பூசா சிறைச்சாலையில் போதைப்பொருள் கடத்தல், கொள்ளைச் சம்பவங்கள் மற்றும் பாதாள உலகக்கும்பல்களின் முக்கிய தலைவர்கள் ஆகியோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
அங்கு இருபத்தி நான்கு மணி நேர தீவிர கண்காணிப்பு மற்றும் சிறைச்சாலை, பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படை , இராணுவம் என்று நான்கு அடுக்கு கடுமையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சிறைச்சாலைகள் திணைக்களம் விசாரணை
இந்நிலையில் முக்கிய குற்றவாளிகள் மற்றும் சந்தேகநபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறை வளாகத்தின் நுழைவாயில் அருகே பூமிக்குள் புதைத்து வைக்கப்பட்டிருந்த ஐந்து நவீன கைப்பேசிகள் மற்றும் அதன் சார்ஜர்கள், ஆகியவற்றிற்கான சிம் கார்ட்கள் என்பன கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சிறைச்சாலை அத்தியட்சகருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் சிறைச்சாலைகள் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.