உணவு பஞ்சத்திலிருந்து மீண்டெழுவோம்: ஒட்டுசுட்டானில் விழிப்புணர்வு பிரச்சாரம்(Photo)
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள உணவு தட்டுப்பாட்டினை குறைக்கும் முகமாக
காலநிலைக்கு சீரான நீர்பாசன விவசாய திட்டத்தின் அனுசரணையுடன் விழிப்புணர்வு
பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட விவசாய திணைக்களத்தினால் இன்று (9) உணவு பஞ்சத்தில் இருந்து மீண்டெழுவோம் என்ற தொனிப்பொருளில் நடமாடும் விற்பனை மற்றும் விழிப்புணர்வு பிரச்சார நடவடிக்கை ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விழிப்புணர்வு பிரச்சாரம்
இதன்போது வீட்டுத்தோட்ட செய்கை, கிழங்கு பயிர்செய்கை ஆகியவற்றை ஊக்குவிக்கும் முகமாக ஒட்டுசுட்டான் பிரதேசத்தில் உள்ள தச்சடம்பன், தண்டுவான், முத்தையன் கட்டுகுளம், கணேசபுரம், கற்சிலைமடு, ஒட்டுசுட்டான் புளியங்குளம், ஆகிய விவசாய போதனாசிரியர் பிரிவுகளில் நடமாடும் விழிப்புணர்வு பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
வீட்டுத்தோட்ட செய்கை மற்றும் கிழங்கு பயிர்செய்கை தொடர்பான ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டல்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், போசாக்கான உணவு தயாரிப்பு செயன்முறையுடன் கூடிய நிகழ்வு புளியங்குளம் விவசாய போதனாசிரியர் பிரிவில் இடம்பெற்றுள்ளது.
உணவு தயாரிப்பு முறைகள்
மரவள்ளிக்கிழங்கனை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் உணவு தயாரிப்பு, இலைக்கஞ்சி தயாரித்தல், மரக்கறிசூப் தயாரித்தல் ஆகியன மக்களுக்கு காண்பிக்கப்பட்டுள்ளளன.
இதன்போது சேதன வளமாக்கிகள்,தாவர பீடைநாசினிகள், விவசாய செய்கைக்கு தேவையான உள்ளுர் அவரையின விதைகள், மரவெள்ளி நடுகை துண்டுகள் மற்றும் ஏனைய விதை உள்ளீடுகள் விற்பனையும் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில், வரவிருக்கும் உணவுப்பஞ்சத்தில் இருந்து எம்மையும் எமது
பிரதேசத்தினையும் நாட்டினையும் பாதுகாக்க ஒன்றிணையுமாறு விவசாயிகளிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



