மூத்த அரசியல்வாதிகள் தேர்தலை தவிர்க்க காரணம்: அநுர தரப்பு விளக்கம்
இலங்கையின் ஊழல் மற்றும் இனவாத அரசியல்வாதிகள், தமது தோல்வியைத் தவிர்ப்பதற்காக இந்த ஆண்டு பொதுத் தேர்தலில் போட்டியிடவில்லை என்று தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் வெற்றிக்கு முன்னதாகவே, அத்தகையவர்களை, அரசியல்வாதிகளாக செயற்பாடாமல் செய்தமையானது, மாபெரும் வெற்றியாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டு தேர்தலுக்கான, தமது கட்சியின் தேசியப் பட்டியலுக்கான வேட்பு மனுப் பட்டியலை கையளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், ஊழல்வாதிகள் மற்றும் இனவாத அரசியல்வாதிகளின் அரசியலை இறுதியில் முடிவுக்கு கொண்டு வந்த அனுர திஸாநாயக்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தமைக்காக, தமது கட்சி, மக்களுக்கு நன்றி தெரிவிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
உடனடி தோல்வி
அநுரகுமார திஸாநாயக்கவை ஜனாதிபதியாக்க வாக்களித்த மக்கள், ஊழல் அரசியல்வாதிகளை அரசியலில் இருந்து அகற்றி பெரிய காரியத்தை செய்துள்ளனர்.
இந்த அரசியல்வாதிகள், உடனடி தோல்வியில் இருந்து தப்பிக்கப் போட்டியிடுவதில்லை எனத் தீர்மானித்துள்ளனர் என்றும் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில், தமது கட்சியின் வேட்பாளர்களுக்கு விளக்கமளிக்க அனைத்து வேட்பாளர்களுடனும் ஒக்டோபர் 11ஆம் திகதியன்று, ஒரு சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது.
அத்துடன், ஜனாதிபதி பங்கேற்கும் கூட்டத் தொடர் நாடளாவிய ரீதியிலும் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |