அதிரடி கைதுகள் தொடரும் - யோசிதவின் கைது தொடர்பில் அரசு வெளியிட்ட தகவல்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் என்பதற்காக யோசித ராஜபக்ச கைது செய்யப்படவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சட்டவிரோதமாகவோ அல்லது சந்தேகத்திற்கிடமான முறையில் காணி அல்லது சொத்து கொள்வனவு செய்யப்பட்டால் சட்டம் அதன் கடமையை செய்யும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
கைதின் பின்னணி
இன்றைய கைதின் பின்னணியில் எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லை என்று அவர் மேலும் கூறினார்.
குற்றச்சாட்டுகள் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், குற்றப் புலனாய்வுத் துறையும் பொலிஸாரும் நீதிமன்றத்தில் உண்மைகளை சமர்ப்பித்து அதற்கேற்ப கைதுகள் மேற்கொள்ளப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
கைது செய்யப்படும் சந்தேக நபர்களுக்கு பிணை கிடைக்கும். ஆனால் வழக்கு தொடரும். சட்டத்தை நடைமுறைப்படுத்துவது நீதித்துறையின் கடமை, அரசாங்கம் அதை எளிதாக்குகிறது என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
போதுமான ஆதாரங்கள்
இன்று காலை குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட யோசித ராஜபக்சவை எதிர்வரும் 27ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இரத்மலானை, சிறிமல் பகுதியில் 34 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வீடு மற்றும் காணியை கொள்வனவு செய்தமை தொடர்பாக யோசித ராஜபக்சவை சந்தேகநபராகப் பெயரிட போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபரால் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்ட நிலையில், அவர் இன்று காலை கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.