நாட்டின் நெருக்கடி தீர்க்க முடியாத பிரச்சினையல்ல: சரத் பொன்சேகா
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் யோசனை முன்வைத்தால், ஜனாதிபதி பதவியை ஏற்க தயாராக இருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி பதவியை ஏற்குமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தொடர்ந்தும் கோரிக்கை விடுத்து வருகிறது. ஐக்கிய மக்கள் சக்தி உட்பட எதிர்க்கட்சியில் உள்ள பெரும்பாலானவர்கள் விரும்பினால், பதவியை ஏற்க தயார்.
அனைத்தையும் கட்சியின் தலைவரிடம் கூற வேண்டிய அவசியமில்லை
அப்படியான அழைப்பு வந்தாலும் அனைத்தையும் ஓடி சென்று ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரிடம் கூற வேண்டியதில்லை. பெரும்பான்மை உறுப்பினர்கள் நிலைப்பாட்டுக்கு தலைவணங்கி நாட்டை பொறுப்பேற்க தயார்.
நாட்டின் நெருக்கடியானது தீர்க்க முடியாத மிகப்பெரிய பிரச்சினையாக நான் காணவில்லை. நான் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி சவேந்திர சில்வா, இராணுவ தளபதி ஆகியோரைபல முறை தொலைபேசியில் தொடர்புக்கொண்டு கலந்துரையாடினேன்.
நான் எதிர்க்கட்சி அரசியல்வாதி என்பதால், எப்போதும் பாதுகாப்பு பிரதானிகளை நேரில் சந்தித்து பேசியது கிடையாது.
போராட்டத்தில் மோதல்கள் அதிகரித்து பிரச்சினை உக்கிரமடைந்த நேரத்தில் நான் அவர்கள் இருவரையும் தொடர்புக்கொண்டு மக்களின் உயிர்களை பாதுகாக்கும் விதத்தில் கடமையை நிறைவேற்றுமாறு கோரிக்கை விடுத்தேன் எனவும் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.