கோர் குழுவின் தீர்மானத்தை எதிர்கொள்ள தயார்! இலங்கை அரசு அறிவிப்பு
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரின் போது முன்வைக்கப்படவுள்ள கோர் குழுவின் தீர்மானத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
வெளியுறவு அமைச்சர் தினேஷ் குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். தனியார் ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியள்ளார். கனடா, ஜேர்மனி, வட மசிடோனியா, மொன்டனீக்ரோ மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கை தொடர்பான கோர் குழு நேற்று ஒரு அறிக்கையை வெளியிட்டது.
“இலங்கையில் பொறுப்புடைமை, நல்லிணக்கம் மற்றும் உள்ளடக்கமான சமாதானத்துக்கான எமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.
போரின் தீங்கு விளைவிக்கும் மரபுகளை அடையாளப்படுத்துவதற்கும்,நாட்டில் நிலையான சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கும் செய்ய வேண்டியவை நிறைய உள்ளன என்பது தெளிவாகின்றது.
” என கோர் குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் முன்வைத்த தீர்மானத்திற்கு ஆதரவான உண்மைகளை இந்த நாட்டின் அரசியலமைப்பின் படி ஒருபோதும் செயல்படுத்த முடியாது என்று அமைச்சர் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கை நீதிமன்றங்களில் வெளிநாட்டு நீதிபதிகள் இருக்க முடியாது என்று அமைச்சர் குணவர்தன சுட்டிக்காட்டினார். அத்தகைய தீர்மானத்தை எதிர்க்க இலங்கையுடன் நிற்கும் நட்பு நாடுகளைப் பற்றி பேசிய வெளியுறவு அமைச்சர், “நாற்பத்தேழு நாடுகள் மனித உரிமைகள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன.
இந்த 47 நாடுகளில், ஆசியா, ஆபிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் உள்ள நாடுகள் இலங்கைக்கு மிகவும் நட்பான பதிலை அளித்துள்ளன. இதுவரை, பெரும்பான்மையானவர்கள் எங்களுடன் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்” என அவர் மேலும் கூறியுள்ளார்.




