சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க உத்தரவு
முன்னாள் பிரதியமைச்சர் சஜின் வாஸ் குணவர்த்தனவுக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்க மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2007 - 2008ஆம் ஆண்டு காலப்பகுதியில் முன்னாள் பிரதியமைச்சர் சஜின் வாஸ் குணவர்த்தன, அப்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட குறைந்த கட்டண விமான சேவையான மிஹின் லங்கா விமானசேவையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக செயற்பட்டிருந்தார்.
அக்காலகட்டத்தில் அவர் அரசாங்க டெண்டர் நடைமுறைகளை மீறி தனியார் நிறுவனமொன்றில் இருந்து உபகரணங்களைக் கொள்வனவு செய்த விவகாரத்தில் அரசாங்கத்துக்கு இழப்பை ஏற்படுத்தியதாக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடித் தடுப்பு ஆணைக்குழு அவருக்கு எதிராக கொழும்பு மேல்நீதிமன்றத்தில் வழக்கொன்றைத் தாக்கல் செய்திருந்தது.
மனு விசாரணை
எனினும், கடந்த காலத்தில் அவர் குறித்த வழக்கில் இருந்து நிரபராதி எனத் தீர்ப்பளிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.
இந்நிலையில், குறித்த தீர்ப்புக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல், மோசடித் தடுப்புப் பிரிவினர் சட்டமா அதிபர் திணைக்களம் ஊடாக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.
குறித்த மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் சஜின் வாஸ் நிரபராதி என்று விடுதலை செய்யப்பட்ட தீர்ப்பை இரத்துச் செய்துள்ளதுடன், அவருக்கு எதிரான வழக்கை மீண்டும் விசாரிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |




