11 இளைஞர்கள் கடத்தப்பட்ட வழக்கு: முன்னாள் கடற்படை தளபதிக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!
கடந்த 2008 ஆம் ஆண்டில் கொழும்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பான சந்தேகநபருக்கு தலைமறைவாக இருக்க உதவினார் எனக் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்னவை பிணையில் விடுவிக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக பிறப்பிக்கப்பட்ட அழைப்பாணைக்கு அமைய நீதிமன்றத்தில் முன்னிலையான நிலையிலேயே அவருக்கு இந்த பிணை அனுமதிக்கப்பட்டுள்ளது.
தமது கட்சிக்காரர் முன்னர் இவ்வழக்கில் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டு, பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுவிக்கப்பட்டவர் என முன்னாள் கடற்படை தளபதி சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜ பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும், நீதிமன்ற அழைப்பாணையை மதித்து அவர் மீண்டும் முன்னிலையாகியுள்ளார் எனவும் அவர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் சட்டத்திற்குப் புறம்பானவை எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேற்கொண்ட முறையான விசாரணைகளுக்குப் பின்னரே இந்த புதிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அச்சலா செனவிரத்ன, தெரிவித்துள்ளார்.
தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்த முன்னாள் கடற்படை தளபதி ரவீந்திர விஜேகுணரத்ன, தான் நிரபராதி எனத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன, சந்தேகநபரான ரவீந்திர விஜேகுணரத்னவை தலா 10 இலட்சம் ரூபா மதிப்பிலான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிட்டார்.
இவ்வழக்கின் பிரதான சாட்சி அரசியல் புகலிடம் பெற்று சுவிட்சர்லாந்தில் வசிப்பதாக தெரிவித்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர், சுவிட்சர்லாந்து தூதரகம் மூலம் அவருக்கு சான்றழைப்பாணை அனுப்ப உத்தரவிடுமாறு கோரியுள்ளனர்.
அதனடிப்படையில், ஆங்கில மொழியில் சான்றழைப்பாணையை வெளியிடுவதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்ட நீதவான், வழக்கின் விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 09 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளார்.