முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலைக்கு விஜயம் மேற்கொண்ட ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலைக்கு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் விஜயமொன்றை மேற்கொண்டு வைத்தியசாலையில் நிலவும் வளப்பற்றாக்குறைகள் மற்றும் அண்மையில் இடம்பெற்ற பெண்ணொருவரின் சர்ச்சைக்குரிய மரணம் தொடர்பிலும் நிலைமைகளைக் கேட்டறிந்துகொண்டார்.
குறிப்பாக முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் பாலசுப்பிரமணியம் தனஞ்சயன் மற்றும் வைத்தியசாலையின் நலன்புரிச் சங்க நிர்வாகத்தினருடனேயே நாடாளுமன்ற உறுப்பினர் இன்றையதினம் கலந்துரையாடல்களில் ஈடுபட்டிருந்தார்.
அந்தவகையில் முல்லைத்தீவு மாவட்ட பொதுவைத்தியசாலையில் சிறுநீரக வைத்தியநிபுணர், நுண்ணுயிரியல் மருத்துவர், நரம்பியல் நிபுணர் உள்ளிட்ட வைத்திய நிபுணர்கள் இல்லாத நிலை காணப்படுவதால் தம்மால் வினைத்திறனான வைத்தியசேவைகளைத் வழங்கமுடியாதுள்ளதாக இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.
அத்தோடு பெண்நோயியல் வைத்திய நிபுணர் மற்றும் குழந்தைநல மருத்துவ நிபுணர் தலா ஒவ்வொருவரே காணப்படுவதாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.
அதிலும் குறிப்பாக குழந்தைநல மருத்துவ நிபுணராக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் தற்போது பணியாற்றிவருபவருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினரிடம் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும் அதற்கு பதிலீடாக நியமிக்கப்பட்ட குழந்தைநல மருத்துவர் மகப்பேற்று விடுமுறையில் இருப்பதால் தற்போது கடமையில் ஈடுபட்டிருக்கும் குழந்தைநலமருத்துவரை இதுவரை விடுவிப்புச்செய்யாமல் வைத்திருப்பதாகவும், பதிலீட்டு குழந்தைநல மருத்துவர் கடமைப்பொறுப்பினை ஏற்றுக்கொண்ட பின்னரே தற்போது கடமையிலுள்ள குழந்தைநல மருத்துவர் இடமாற்றத்திற்கு தம்மால் அனுமதிக்கப்படுவார் எனவும் வைத்தியசாலை பிரதிப்பணிப்பாளரால் இதன்போது தெளிவுபடுத்தப்பட்டது.
அதேவேளை சட்டவைத்திய அதிகாரியும் தற்போது இல்லாதநிலை காணப்படுவதால் மரணவிசாரணைகள் மற்றும் உடற்கூற்றுப் பரிசோதனை உள்ளிட்ட விடயங்களைக் கையாள்வதில் பல்வேறு இடர்நிலைகளுக்கு முகங்கொடுக்கவேண்டிய நிலைகாணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.









