இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களை நேரில் சென்று பார்வையிட்ட ரவிகரன் எம்.பி
கொக்குத்தொடுவாய் மகாவித்தியாலயம் இடைத்தங்கல் முகாமில் தங்கியுள்ள மக்களை வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச் சென்று பார்வையிட்டுள்ளார்.
முல்லைத்தீவு - கொக்குத்தொடுவாய் வடக்கு பகுதியில் வெள்ள அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டு முகாமில் தங்கியுள்ள மக்களையே இன்றையதினம் துரைராசா ரவிகரன் எம்.பி பார்வையிட்டுள்ளார்.
குடும்பங்கள் பாதிப்பு
கொக்குத்தொடுவாய் வடக்கு கிராம அலுவலர் பிரிவில் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள நீர் மூழ்கிக் காணப்படுவதால் 36 இற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 170ஏக்கருக்கும் மேற்பட்ட நிலக்கடலைச் செய்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தனர்.
குறித்த பகுதியில் மழைக்காலங்களில் தொடர்ச்சியாக இவ்வாறான வெள்ள அனர்ந்தங்கள் இடம்பெற்றுவருவதாகவும் அப்பகுதி மக்கள் இதன்போது சுட்டிக்காட்டினர்.
கோரிக்கை
எனவே தொடர்ச்சியான இந்த வெள்ள அனர்த்தப் பாதிப்புக்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் பொருட்டு உரியவகையில் வடிகாலமைப்பு வேலைகளை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்ற உறுப்பினரிடம் மக்களால் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில் மக்களின் பாதிப்புநிலைமை தொடர்பில் கேட்டறிந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், அப்பகுதி மக்களின் கோரிக்கைக்கு அமைவாக அப்பகுதியில் உரியவகையில் வடிகாலமைப்பை ஏற்படுத்துவது தொடர்பில் தம்மால் கவனம் செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.