கரைவலைத் தொழிலை ஊக்குவிப்போர் மீது மிகக் கடுமையான சட்ட நடவடிக்கை தேவை: ரவிகரன் எம்.பி வலியுறுத்து
சட்டவிரோத கரைவலைத் தொழில் முறையை மேற்கொள்வதற்கு கடந்த கால அரசுகளும், அமைச்சர்களும், அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்தியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில், நாடாளுமன்றில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார்.
பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் கையொப்பமிடாத எம்.பிக்கள்:அமைச்சர் வெளியிட்ட பகிரங்க தகவல்
சட்டவிரோத கடற்றொழில்
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
சட்டவிரோத கடற்றொழில் நடவடிக்கைகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்புகளில் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக, சுருக்குவலை, வெளிச்சம்பாய்ச்சி மீன்பிடித்தல், வெடிவைத்து மீன்பிடித்தல் போன்ற சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

இந்த சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகள் வடக்கு, கிழக்கு கடற்பரப்பில் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருவதைச் சுட்டிக்காட்டி, இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றோம்.
அந்தவகையில், இத்தகைய சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த வேண்டும் என்ற நோக்குடன் கடற்றொழில் அமைச்சரும், பிரதி அமைச்சரும் செயற்பட்டு வருகின்றீர்கள் என்பதை நான் அறிவேன்.
நிச்சயமாக இவ்வாறான சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளும் எவராக இருப்பினும் அவர்களுக்கெதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
நடவடிக்கை எடுக்க வேண்டும்..
மேலும், கடந்த கால அரசுகள் சட்டவிரோத கரவலை தொழில் முறையை கடற்றொழிலாளர்கள் மேற்கொள்வதற்கு ஊக்கப்படுத்தி தவறான செயற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
அவ்வாறு கடந்தகால அரசுகள் சட்டவிரோதமான கரவலை முறைகளை மேற்கொள்வதற்கு கடற்றொழிலாளர்களை அனுமதித்ததால் தற்போது அந்த கடற்றொழிலாளர்கள் அவதிப்படுகின்றனர்.

இவ்வாறான சட்டவிரோதமான கரைவலைத் தொழில்முறைக்கு கடற்றொழிலாளர்களை ஊக்கப்படுத்திய கடந்த கால அரசுகளுக்கெதிராகவும், அமைச்சர்களுக்கெதிராகவும், இதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களுக்கு எதிராகவும் மிகக்கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படவேண்டும் என இந்த அரசைக் கேட்டுக்கொள்கின்றேன்.
இதேவேளை, இந்த அரசு சட்டவிரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்த மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு நன்றிகளையும் தெரிவித்துக்கொள்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.