தண்ணிமுறிப்பு மக்களின் அகதி வாழ்விற்கு முற்றுப்புள்ளி தேவை - ரவிகரன் எம்.பி
முல்லைத்தீவு - கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட, தண்ணிமுறிப்பு கிராம மக்களின் அவலங்கள் நிறைந்த அகதி வாழ்க்கை முற்றுப்பெற வேண்டுமென வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தண்ணிமுறிப்புப் பகுதியை நேற்றையதினம்(15.05.2025) சென்று பார்வையிட்ட அவர், அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
“முல்லைத்தீவு - கரைதுறைப்பற்றுப் பிரதேசத்திலுள்ள தமிழர்களின் பூர்வீக கிராமமான தண்ணிமுறிப்பு இதுவரையில் மீள்குடியமர்த்தப்படவில்லை.
நீர்பாசனக் குளம்
அந்தவகையில் தமிழர்களின் பூர்வீக தண்ணிமுறிப்புக் கிராமத்தில் பன்னெடுங்காலமாக மிகப்பாரிய நீர்பாசனக் குளமான தண்ணிமுறிப்புக் குளம் காணப்படுகின்றது.
இந்தத் தண்ணிமுறிப்புக் குளத்தோடு சேர்ந்திருந்த கிராமமே தண்ணிமுறிப்புக் கிராமமாகும்.
இக்கிராமத்தில் பாடசாலை, முன்பள்ளி, உப தபாலகம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் பொதுப் போக்குவரத்து சேவைகளும் காணப்பட்டுள்ளன.
அவல நிலை
இந்தப் பகுதி மிக அதிகமான நெற் பயிர்ச்செய்கை செய்யப்படுகின்ற பல்லாயிரக்கணக்கான ஏக்கர் வயலும் வயல் சார்ந்த இடமாகக் காணப்படுவதால் நெற் களஞ்சியசாலையும் இங்கு இருந்துள்ளது.
இவ்வாறாக தன்னிறைவுடன், செழிப்பான கிராமமாக தண்ணிமுறிப்புக் கிராமம் இருந்துள்ளது. இங்கிருந்து இடம்பெயரும் போது, இப்பகுதியில் 56 குடும்பங்கள் இருந்ததாகச் சொல்லப்படுகின்றது.
தற்போது 150க்கு மேல், குடும்பங்கள் பெருகி, ஆங்காங்கே அகதிகளாக குடியிருக்கும் அவல நிலையை எதிர்நோக்கியுள்ளனர்” எனக் கூறியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |






