தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் தன்னிறைவு பெற்ற மக்கள்! நாடாளுமன்றில் தெரிவித்த எம்பி..
தமிழீழ விடுதலைப்புலிகளின் நிழலரசு இருந்த காலத்தில் மக்கள் அனைத்து விதத்திலும் தன்னிறைவு பெற்றிருந்ததாகவும், எனவே போருக்கு முன்னரான காலத்தில் சமச்சீரற்ற வள அணுகல் தொடர்பில் தாம் குரல் எழுப்பவேண்டிய தேவையும் ஏற்படவில்லையென வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
தெற்கில் உள்ளோர் காணும் அதே உலகத்தை அதே உலகியல் அனுபவத்துக்கான வாய்ப்பை வடக்கில் உள்ளோரும் பெறுவது தான் சமத்துவமெனத் தெரிவித்த நாட்டின் தென்பகுதிக்கு மேற்கொள்ளும் ஒதுக்கீடுகளைப்போல வடக்கிற்கும் அதே அளவிலான சமனான ஒதுக்கீடுகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார்.
வரவுசெலவுத்திட்டம்
ஆனால் போருக்குப் பிறகான காலத்தில் வன்னி மாவட்டம், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு தரப்படுத்தல்களிலும் கடைசி நிலையிலும் கடைசிக்கு அண்மைய நிலையிலும் விளங்கியதை இலங்கை அரசின் புள்ளிவிபரங்களிலேயே பார்க்கமுடிவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக்காட்டினார்.

நாடாளுமன்றில் 11.11.2025இன்று இடம்பெற்ற 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் மன்னார் மாவட்ட பொது மருத்துவமனைக்கான விபத்து மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவு கட்டுமானம், புத்தளம் மன்னார் மாற்றுவழிக்கான இயலுமை ஆய்வு, விவசாயத்துறை சார்ந்து வவுனியா, மன்னார் சிறு பற்றுநில விவசாயிகளுக்கான வலுவூட்டல், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு விவசாய உணவு உற்பத்தியாளர்களுக்கான வலுவூட்டல், முல்லைத்தீவு விவசாய உற்பத்திப் பொருள்களுக்கான சந்தை உட்கட்டமைப்பை மேம்படுத்தல் உள்ளிட்ட குறித்துக் கூறப்பட்ட வன்னி மாவட்டத்திற்குள்ளான நிதி ஒதுக்கீட்டுக்கு வன்னி மாவட்டத்தைச் சார்பாக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இவ்வாண்டில் தொடங்கப்பட்ட வெட்டுவாய்க்கால் பாலக் கட்டுமானத்துக்கான 2026ஆம் ஆண்டின் தொடர் நிதி ஒதுக்கீட்டுக்கும் முல்லைத்தீவு மக்கள் சார்பான மனமார்ந்த நன்றி. மேலும் பேரவைத் தலைவர் அவர்களே! இந்தத் தீவில் உள்ள அனைவருக்கும் சம அளவான வாய்ப்புகள் கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்துவதே சமத்துவம் என எண்ணுகிறோம். தெற்கில் உள்ளோர் காணும் அதே உலகத்தை/அதே உலகியல் அனுபவத்துக்கான வாய்ப்பை வடக்கில் உள்ளோரும் பெறுவது தான் சமத்துவம். போருக்கு முன்னரான காலத்தில் சமச்சீரற்ற வள அணுகல் தொடர்பில் நாங்கள் குரலெழுப்பவில்லை. குரல் எழுப்பவேண்டிய தேவையும் எங்களுக்கு ஏற்படவில்லை.
போருக்குப் பின்னரான வன்னி
அப்போதிருந்த எங்களின் நிழல் அரசு அனைவர்க்குமான வளப்பகிர்வை, தற்சார்பு வாழ்வியலை, போதை அறவே அற்ற, அறம் நிரம்பிய வாழ்வை சான்றாக்கி இருந்தது.
போருக்குப் பிறகான காலத்தில் வன்னி மாவட்டம், குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டம் பல்வேறு தரப்படுத்தல்களிலும் கடைசி நிலையிலும் கடைசிக்கு அண்மைய நிலையிலும் விளங்கியதை இலங்கை அரசின் புள்ளிவிபரங்களே காட்டின.

கடந்த ஓராண்டு காலமாக வன்னி மாவட்டம் அபிவிருத்தியில் பெரும்பாலான துறைகளில் மிகவும் பின்னடைவாக காணப்படுவதை புள்ளிவிபரங்களோடு துறைதோறும் விவாதித்திருந்தேன் மீன்பிடி, விவசாயம், சிறுகைத்தொழில், சுகாதாரம், போக்குவரத்து, கல்வி, சுற்றுலா, பாதுகாப்பு என வாழ்வுக்கும் வாழ்வாதாரத்துக்கும் நாளும் நாளும் போராடிப் போராடி வாழுகிற வாழ்வியலை இந்த அரசும் தக்கவைக்கிறதா என்ற கேள்வியோடு மிகவும் நெருக்கமாகத்தான் இந்த வரவுசெலவுத்திட்டம் பயணிக்கப்போகிறது.
திருடர்கள் களவெடுக்கிறார்கள். வந்து பிடியுங்கள் என்றால் எங்களிடம் ஆட்கள் இல்லை என்று எந்த ஒரு காவல் நிலையமேனும் கூறுமா? கூறத்தான் இயலுமா! முல்லைத்தீவு கடற்பரப்பிலே ஒவ்வொரு நாளும் தான் திருட்டுத் தொழில் நடைபெறுகிறது. கண்ணெதிரே சட்டத்துக்கு புறம்பாக நடைபெறும் இந்த மீன்பிடியை – ஊழலை, உங்கள் அரசால் ஏன் இன்னும் கட்டுப்படுத்த இயலவில்லை.
விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டு
ஊழல் எங்கே உள்ளது? அகத்திலா புறத்திலா! அடுத்துவரும் ஓராண்டும் இந்த அரசு எங்கள் கடற்றொழிலார்களின் வயிற்றில் அடிக்கப்போகிறதா!தடைசெய்யப்பட்ட தொழில்முறைகளை காலந்தாழ்த்தாது விரைவாக கட்டுப்படுத்துங்கள். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த காலத்திலேயே குளிரூட்டிய பேருந்துகளில் பயணித்த எங்கள் மக்களுக்கு மாறி மாறி வரும் அரசுகளால் இந்த 15 ஆண்டுகளில் ஒரு குளிரூட்டிய பேருந்துக்கான வழித்தடத்தைக் கூட முல்லைத்தீவுக்கு வழங்க இயலவில்லை.

இலங்கையில் உள்ள உயர் மருத்துவமனைக் கட்டமைப்புகளில் 03 தேசிய மருத்துவமனைகள், 15 போதனா மருத்துவமனைகள், 14 சிறப்பு மருத்துவமனைகள் மற்றும் 21 மாவட்ட பொது மருத்துவமனைகள் என மொத்தமாக உள்ள 53 உயர் மருத்துவமனைகளில்… மொத்தமாக உள்ள 53 உயர்தர மருத்துவமனைகளில் மன்னாரும் முல்லைத்தீவும் மட்டும் தான் இன்னமும் கஸ்ட மருத்துவமனைகள்! மாவட்டத்தின் அதி உச்ச மருத்துவமனைக் கட்டமைப்பையே தொடர்ந்தும் கஸ்ட மருத்துவமனைகளாக இன்னும் எத்தனை ஆண்டுகாலமாக நீங்கள் தக்கவைக்கப் போகிறீர்கள்? இலங்கையிலே ஆதார வைத்தியசாலைகளில் கூட பயிற்சி மருத்துவர்களை பேணுகிற இந்த அரசு மன்னார், முல்லைத்தீவு மாவட்டத்தின் உச்ச மருத்துவமனைகளுக்கு எப்போது அந்த வசதியை வழங்கப் போகிறது.
2026இலும் வழங்கப்போவதில்லையா! பேரவையின் தலைவர் அவர்களே… குடிப்பதற்கு உகந்த நீர் வசதியற்ற மருத்துவமனைகள் இன்னமும் வன்னி மாவட்டத்தில் உள்ளன.
இன்னும் எத்தனை ஆண்டுகாலத்திற்கு எங்களை கஸ்ட கஸ்ட கஸ்ட என்ற பட்டியலுக்குள் துறைகள் தோறும் வைக்கப்போகிறீர்கள்? 2026ஆம் ஆண்டிலேனும் கஸ்ட மருத்துவமனை என்ற அடையாளத்தில் இருந்து நீக்கும் வகையிலான நிதி ஒதுக்கீட்டை, நிபந்தனையற்று வழங்கி எங்களுக்கும் சமமான அணுகலுக்கான வாய்ப்பைத் தாருங்கள்.
கலைத்திட்ட நடைமுறை
நீண்டகாலமாக முழுமைப்படுத்தப்படாது விபத்து ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகளை கொண்ட கட்டடங்கள் கல்வி வலயங்கள் தோறும் காணப்படுகின்றன. முல்லைத்தீவு கல்வி வலயத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் ஏழாண்டுக்கும் மேலாக கைவிடப்பட்ட நிலையில் உள்ள ஒரு மாடிக்கட்டடத்தை நான் நேரில் சென்று பார்த்திருந்தேன்.
வள ஒதுக்கீட்டில் மிகவும் பிற்படுத்தப்பட்டுள்ள வவுனியா கல்வியியல் கல்லூரியிலும் இவ்வாறான முழுமைப்படுத்தப்படாத கட்டடம் உண்டு! இத்தகைய கட்டடங்களை விரைவாக முழுமைப்படுத்தி அவற்றை கலைத்திட்ட நடைமுறைக்கு கையளியுங்கள்.

பாடசாலைக்கட்டட மேம்பாடு, பராமரிப்பு சார்பான தங்களின் 23.7பில்லியன் நிதி ஒதுக்கீட்டிலும் இடர்களுக்கு எதிராக பாடசாலைகளின் பாதுகாப்பை மேம்படுத்தல் சார்பான 0.8 பில்லியன் நிதி ஒதுக்கீட்டிலும் இத்தகைய சூழல் நிலைமைகளுக்கு முன்னுரிமை அளியுங்கள்! தகவல் தொழினுட்ப நிலைமாற்றத்திற்கான வள ஒதுக்கீட்டிலும் தீவளாவிய வகையில் வடக்கும் கிழக்கும் பின்தங்கி உள்ளது.
வடக்கிலே மூன்று கல்வி வலயங்களிலும் கிழக்கிலே நான்கு கல்வி வலயங்களிலும் தகவல் தொழினுட்ப தொலைக்கல்வி நிலையங்கள் (ITDLH) இன்னமும் நிறுவப்படாதுள்ளன.
புள்ளிவிபரங்களின் அடிப்படையில் ஸ்ரெம் கல்வியில் முல்லைத்தீவு மாவட்டம் மிகவும் பின்தங்கி உள்ளது.
பாரிய சவால்கள்
ஆய்வுகூட வசதி போதாமை, ஆய்வுகூடத்தில் பரிசோதனைகளை மேற்கொள்வதற்கான வளங்கள் போதாமை, வடமாகாணத்தில் உள்ள கல்வி வலயங்களில் கணித விஞ்ஞான ஆசிரியர்களின் சமச்சீரற்ற பரம்பல், தகவல் தொழினுட்ப ஆய்வுகூட வசதிகள் போதாமை, பழுதடைந்த கணினிகளை திருத்துவதற்கும் திருத்த இயலாத காலங்கடந்த கணினிகளை பதிவழிப்பதற்கும் வினைத்திறனான பொறிமுறை இன்றிய நிலை என்பன தகவல் தொழினுட்ப நிலைமாற்றத்திற்கு சவாலாகின்றன.

2026 தொடக்கம் நடைமுறைப்படுத்தப்படவுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புக்கும் இவை பாரிய சவால்கள்! இலத்திரனியல் வள நிரப்பலுக்கான நிதி ஒதுக்கீடு அனைத்து மாவட்டங்களுக்கும் சமத்துவ அடிப்படையில் கிடைப்பதை தயவு செய்து உறுதிப்படுத்துங்கள்! வீதி புனரமைப்பு, கிராமப்புற பாலங்கள் புனரமைப்பு, பிரதேசங்கள் மற்றும் கிராமங்கள் வரையான பேருந்து வசதி, பேருந்து தரிப்பிடங்களுக்கான தேவை என்பவற்றில் முல்லைத்தீவு மாவட்டத்தின் துணுக்காய் - மாந்தை கிழக்கு பிரதேசங்கள் கடுமையான சமச்சீரற்ற நிலைக்குச் சான்றாகின்றன.
விவசாய உற்பத்திப்பொருள்களை சந்தைப்படுத்துவதிலும் ஊழியர்கள் பணிக்குச் செல்வதிலும் மாணவர்கள் பாடசாலையிலிருந்து மீண்டும் வீடு திரும்புவதிலும் நோயாளிகள் மருத்துவ வசதிகளைப் பெறுவதிலும் குறித்த பிரதேச மக்கள் சமமான அணுகலை இன்றுவரை பெறவில்லை. போக்குவரத்துக்கான 456 பில்லியன் உரூபாய் நிதியிலே அவர்களின் இடர்களையும் இழிவளவாக்க வகைசெய்யுங்கள் என இந்தப்பேரவையிலே கேட்டுக்கொள்கிறேன் - என குறிப்பிட்டுள்ளார்.
குணசேகரன் பற்றி வெளிவந்த ரகசியம், கடும் ஷாக்கில் பெண்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
டெல்லி குண்டுவெடிப்பு ஆபரேஷன் சிந்தூருக்கு பதிலடியா? 2 வாரம் முன்பே எச்சரித்த LeT தளபதி News Lankasri
குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ் நாள் முழுவதும் ஏற்க தயார்... மாதம்பட்டி ரங்கராஜ் கொடுத்த ஷாக் Manithan
Numerology: இந்த தேதியில் பிறந்தவர்கள் இன்ப துன்பங்களை மறந்து வாழ்வார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan