வன்னி மாவட்டத்தில் நிலவும் கல்விசார் குறைபாடுள்.. பிரதமருக்கு ரவிகரன் எம்பி கடிதம்
வன்னிப் பிராந்தியத்தில் நிலவும் கல்விசார் குறைபாடுகளை தீர்ப்பதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு கடிதமொன்றினைக் கையளித்துள்ளார்.
குறிப்பாக கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை, முற்றுப்பெறாத மற்றும் கைவிடப்பட்ட பாடசாலைக் கட்டுமானங்கள், இலக்கமுறை இடைவெளி மற்றும் தகவல் தொழில்நுட்ப நெருக்கடி, சுகாதாரவசதி குறைவுகளால் பாடசாலைகளில் ஏற்படும் சுகாதாரச் சீர்கேடுகள், கற்றல் பெறுபேறுகளிலுள்ள ஏற்றத்தாழ்வு உள்ளிட்ட மிகமுக்கியமான குறைபாடுகள் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாடாளுமன்றக் கட்டடத்தொகுதியில் நேற்று (09.01.2025) பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கும் இலங்கைத் தமிழ் அரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பின்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன், பிரதமர் ஹரிணி அமரசூரியவிடம் இக்கடிதத்தைக் கையளித்துள்ளார்.
முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கை
அந்தவகையில் வன்னிப் மாவட்டத்தில் நிலவும் அவசர கல்விசார் குறைபாடுகள் தொடர்பில் உடனடித் தலையீடு கோருதல் எனத் தலைப்பிடப்பட்டுள்ள இக்கடிதத்தில் மேலும்,

"கல்வி மீதான வரவு செலவுத் திட்ட விவாதத்தின் போது நான் எழுப்பிய விடயங்களைத் தொடர்ந்து, வன்னி தேர்தல் மாவட்டம் எதிர்கொள்ளும் நீண்டகால மற்றும் முறைமைசார் சவால்களை மீண்டும் உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
எமது மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் பாரதூரமான வளப் பற்றாக்குறைகள் குறித்து உங்களின் உடனடித் தலையீட்டை நான் பணிவுடன் வேண்டுகிறேன்.
கல்வியில் சமத்துவம் மற்றும் இலக்கமுறை நிலைமாற்றம் ஆகியவற்றுக்கான தேசியக்கொள்கையில் அர்ப்பணிப்புகள் இருந்தபோதிலும், வன்னி பிராந்தியத்தில் உள்ள பாடசாலைகள் கட்டமைப்பு ரீதியான, மனிதவள ரீதியான மற்றும் தொழில்நுட்ப ரீதியான குறைபாடுகளைத் தொடர்ந்து எதிர்கொண்டு வருகின்றன. இவை ஏனைய மாகாணங்களுடன் ஒப்பிடுகையில் எமது மாணவர்களைக் கடுமையான பின்னடைவுக்கு உள்ளாக்குகின்றன" என குறிப்பிடப்பட்டுள்ளது.