வடக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் குறித்து முன்வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள்
வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை முற்றாகச் சிதைக்கின்ற இந்திய இழுவைப்படகுகளின் வருகையை உடனடியாக கட்டுப்படுத்துமாறு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரிடம் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று (05.01.2026) இடம்பெற்ற கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது, வடக்கில் யாழ்ப்பாணம், தீவகம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னார் ஆகிய மாவட்டங்களின் கடற்பரப்புக்களில் இந்திய இழுவைப்படகுகளின் அடாவடித்தனமான செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் கடற்றொழில் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
கடல்வளங்கள் பாதிப்பு
குறிப்பாக வடபகுதி கடற்பரப்பில் கடற்கரைகளை அண்மித்து இந்திய இழுவைப்படகுகள் இழுவைமடித் தொழிலில் ஈடுபட்டு கடல்வளங்களை சூறையாடுவதுடன், வடபகுதி கடற்றொழிலாளர்களின் கடற்றொழில் உபகரணங்களையும் சேதப்படுத்திச் செல்வதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரால் இதன்போது தெரிவிக்கப்பட்டது.

வடபகுதியைச் சேர்ந்த கடற்றொழிலாளர்கள் கடந்த யுத்தகாலப்பகுதியில் மிகவும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, தற்போது அவர்கள் தமது அன்றாட வாழ்வாதாரத்தினை கொண்டு செல்வதற்கே பாரிய இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்து வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்தார்.
இந்திய இழுவைப்படகுகளின் இவ்வாறான அடாவடித்தனமான செயற்பாடுகள் வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேலும் சிக்கலுக்குள் தள்ளுவதாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.
அத்துமீறிய நடவடிக்கைகள்
அதேவேளை, இந்திய இழுவைப்படகுகளின் அடாவடித்தனமான செயற்பாடுகளை கட்டுப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சரிடம் தொடர்ச்சியாக முறையீடுகளைச் செய்துவருவதாகவும், கடற்றொழில் பிரதியமைச்சர் முல்லைத்தீவிற்கு வரும்போதும் இவ்விடயம் தொடர்பில் தெரியப்படுத்தியிருந்ததாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் இதன்போது நினைவுபடுத்தினார்.

இருப்பினும் தற்போதும் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய வருகையை கட்டுப்படுத்துவதில் இலங்கை அரசிற்கு இராஜதந்திர ரீதியான சிக்கல்நிலை இருந்தாலும், வடபகுதி கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரப் பாதிப்பு நிலையை கருத்திற்கொண்டு இந்திய இழுவைப்படகுகளைக் கட்டுப்படுத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரனால் இதன்போது வலியுறுத்தப்பட்டது.
இந்நிலையில், இந்திய இழுவைப்படகுகளின் வருகையைக் கட்டுப்படுத்துவதற்கு உரியநடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமென கடற்றொழில் அமைச்சர் மற்றும் பிரதியமைச்சர் உள்ளிட்டோரால் பதிலளிக்கப்பட்டுள்ளது.