ரவிச்சந்திரன் சார்பில் இடைக்கால பிணை கோரி மனு தாக்கல்
இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பிலான ஆயுட் தண்டனை கைதிகளில் ஒருவரான ரவிச்சந்திரன் சார்பில், இந்திய உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஆர்.பி.ரவிச்சந்திரன் முன்னதாக தாக்கல் செய்த மனுக்களை சென்னை மேல்நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்தது.
மேலும், சமீபத்தில் பேரறிவாளனை உயர் நீதிமன்றம் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுவித்துள்ளது.
இடைக்கால பிணை
அந்த சிறப்பு அதிகாரம் தமது நீதிமன்றுக்கு இல்லை என்று கூறி, சென்னை மேல் நீதிமன்ற நீதிபதிகள், ரவிச்சந்திரனின் மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
இதனையடுத்து, சென்னை மேல்நீதிமன்ற தள்ளுபடிக்கு எதிராக ரவிச்சந்திரன் சார்பில் உயர்நீதிமன்றில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கு முடிவுக்கு வரும் வரை தமக்கு இடைக்கால பிணையை கோரியே மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கொலை
முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி 1991 ஆம் ஆண்டு தமிழகம் ஸ்ரீ பெரபுத்துாரில் வைத்து தற்கொலை தாக்குதல் மூலம் கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலை தொடர்பில் முருகன், நளினி, ரவிச்சந்திரன் உட்பட்ட 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பேரறிவாளன் ஒரு மாதத்துக்கு முன்னர் உயர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
