அமைச்சர் லொஹான் ரத்வத்தையை தண்டிக்கும் பொறுப்பு ஜனாதிபதியிடம் கோட்டாவிடம்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள இரண்டு தமிழ் அரசியல் கைதிகளை துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்தியதாக கூறப்படும் இலங்கையின் ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த மீதான விசாரணையின் முடிவு இன்னும் வெளியிடப்படவில்லை.
அனுராதபுரம் சிறைச்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக முறையிடப்பட்டிருந்தது.
கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு (CPRP) முறைப்பாடு ஒன்றை செய்துள்ளதாக அதன் தலைவரும் சட்டத்தரணியுமான சேனக பெரேரா தெரிவித்தார்.
எனினும் தமது முறைப்பாடு தொடர்பான முன்னேற்றங்கள் குறித்து தங்களுக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை என்று அவர் கூறினார்
இந்த சம்பவம் தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கத் தவறினால், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும் என்று அவர் எச்சரித்தார்.
இதற்கிடையில் சிறைச்சாலைகள் ஆணையாளர் சுனில் கொடித்துவக்குவினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கை சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனியவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகளின் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தவிற்கு எதிரான குற்றச்சாட்டுக்களை ஆராய்வதற்காக நீதியமைச்சினால் முன்னாள் நீதிபதி குசலா வீரவர்தன நியமிக்கப்பட்டிருந்தார்.
அவரின் இறுதி விசாரணை அறிக்கை தற்போது ஜனாதிபதிக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் அதனை அமைச்சரவையில் சமர்ப்பிப்பார் என்று நீதியைமைச்சர் அலி சாப்ரி தெரிவித்துள்ளார்.
