விவசாய விளைபொருட்களை அழிக்கும் எலிகள் : தீர்வில்லாது தொடரும் பிரச்சினை
விவசாய விளைபொருட்களை பாதுகாத்து சந்தைப்படுத்த முடியாத சூழலை விவசாயிகள் எதிர்கொள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
விவசாயிகள் தங்களின் விவசாய முயற்சியினால் கிடைக்கும் அறுவடையை வீடுகளில் பாதுகாத்து வைப்பதில் அதிகளவான சவால்களை எதிர்கொள்கின்றனர்.
அறுவடை முடிந்த உடன் விற்பனை செய்வதிலும் பார்க்க கொஞ்ச நாட்கள் அவற்றை சேமித்து வைத்து விற்பதன் மூலம் அதிக இலாபத்தினை பெறும் நோக்கோடு செயற்படும் விவசாயிகளுக்கு அறுவடைகளை பாதுகாத்து வைப்பதற்கான சூழல்கள் பொருத்தமற்றதாக இருப்பதாக தெரிவிக்கின்றனர்.
உற்பத்தியை அடுத்துவரும் போகத்திற்காக விதைகளைக் கூட பேணி வைப்பதில் பெரும் இழப்பைச் சந்திக்க நேருடுகின்றதாக குறிப்பிடப்படுகிறது.
இந்த அவலம் வன்னிப் பெருநிலப்பரப்பில் பல பாகங்களிலும் உள்ள விவசாயிகளை விட்டுவைக்காது இருக்கின்றது.
விவசாயத் துறைசார்ந்த அறிவியல் மேம்பாட்டின் மூலம் அறுவடைகளை பாதுகாக்கும் புதிய பொருத்தமான வழிமுறைகள் தேவைப்படுவதாக விவசாயிகள் குறிப்பிடுகின்றனர்.
எலி, அணில் தொல்லை
நிலக்கடலை, நெல் என விதைகளை சேமித்து வைக்கும் போது எலிகளும் அணில்களும் கட்டுப்பாடற்ற முறையில் சேதத்தினை ஏற்படுத்துகின்றது.
இதனைத் தடுப்பதற்கு பல்வேறு முயற்சிகளை விவசாயிகள் காலத்துக்கு காலம் எடுத்த போதும் நிரந்தரமான தீர்வுகளைப் பெறமுடியாமை கவலைக்குரிய விடயமாகும்.
ஒட்டுசுட்டானில் பெரும்போக அறுவடைகளை சேமித்து வைத்து தற்போது விற்பனை செய்த விவசாயி ஒருவருக்கு எலிகள் மற்றும் அணில்களால் அதிகளவான நெல், நிலக்கடலையை சேதத்திற்குள்ளாக்கி நட்டமடையச் செய்திருந்தமையை அவதானிக்க முடிகின்றது.
விவசாயிகளுக்கு தங்கள் அறுவடைகளை பாதுகாத்துப் பயன்படுத்தவும் விற்பனை செய்து கொள்ளவும் ஒரு நல்ல அடிப்படைக் கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டியது அவசியமாகும்.